கிரைம் டிராமா ஷோ சிஐடியில் இன்ஸ்பெக்டர் தாஷா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி தன்ராஜ். அதை தவிர தேரே இஷ்க் மே கயல் மற்றும் பெப்பன்னா போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு பகுதியாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நடிகை வைஷ்ணவி தன்ராஜ் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் உதவி கேட்டு கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தனது குடும்ப உறுப்பினாரால் அவர் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உதவி கேட்டு வீடியோ :
நடிகை வைஷ்ணவி தன்ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் "ஹலோ நான் வைஷ்ணவி தன்ராஜ். எனக்கு இப்போது உதவி தேவை. நான் தற்போது காஷிமிரா, காவல் நிலையத்தில் உள்ளேன், எனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் நான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டுள்ளேன். தயவுசெய்து எனக்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை. ஊடகங்கள், செய்தி சேனல்கள் மற்றும் தொழில்துறையினர் அனைவரும் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
எச்சரித்த போலீஸ் :
வைஷ்ணவி வெளியிட்டு இருந்த வீடியோவில் முகம், உதடுகள், வலது கை மற்றும் மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன அந்த காயங்களை காட்டித்தான் அவர் உதவி கேட்டுள்ளார். வைஷ்ணவியின் புகாரை பெற்றுக்கொண்ட காஷிமிரா காவல் நிலைய அதிகாரி, அவருடைய தாய் மற்றும் சகோதரனையும் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
குடும்ப வன்முறை தாக்குதல் :
நடிகை வைஷ்ணவி தன்ராஜ் ஏற்கனவே உடல் ரீதியான வன்முறைக்கு ஆளானவர். தனது திருமணத்திற்கு பிறகு குடும்ப வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வைஷ்ணவி தன்ராஜ் 2016ம் ஆண்டு நடிகர் நிதின் ஷெராவத்தை திருமண செய்துகொண்டார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைஷ்ணவி தனது திருமண வாழ்க்கை குறித்து பேசுகையில் அவர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் தான் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவரின் கணவர் உயிரை மட்டும் தான் எடுக்கவில்லை. ஆனால் காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்து உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதால் தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என தெரிவித்து இருந்தார். அதற்கு பிறகு தான் விவாகரத்து பெற்றேன் என தெரிவித்து இருந்தார் வைஷ்ணவி தன்ராஜ்.