பிரபல நடிகர் வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் நிகழ்ச்சியில் அரை வாங்கிய கிரிஸ் ராக், மறுபடியும் ஆஸ்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக  கிடைத்த வாய்ப்பை புறக்கணித்துள்ளார்!


ஆஸ்கரை புறக்கணித்த க்ரிஸ் ராக்!


அடுத்த வருடத்திற்கான ஆஸ்கர் நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல காமெடியனான கிரிஸ் ராக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை க்ரிஸ் ராக் புறக்கணித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதைக் கூறியுள்ளார். இது, ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, ஹாலிவுட் படங்களான மென்-இன்-ப்ளாக், ஐ ஆம் லெஜன்ட், ஆஃப்டர் எர்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானாவர் வில் ஸ்மித். இவரது பெரும்பாலான படங்கள் தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே, தமிழ்நாட்டில் உண்டு. 1985-ஆம் ஆண்டு திரையுலகிற்கு வந்த இவர், இன்று ஹாலிவுட்டின் முகமாகவே மாறிவிட்டார். இவர் நடித்த அலாடின், பேட் பாய்ஸ், மேட் இன் அமெரிக்கா, இன்டிபன்டன்ஸ் டே உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட் அடித்தன. இவர் தனது மகனுடன் சேர்ந்து நடித்த பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ், ஆஃப்டர் தி எர்த்  போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.


நடிப்பு மட்டுமன்றி, தனது மனைவி ஜாடா பிங்கட் ஸ்மித்துடன் சேர்ந்து ஏழை குழந்தைகளுக்காக சில சமூக சேவைகளையும் வில் ஸ்மித் செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியில், ஹாலிவுட்டின் ஸ்டான்ட்- அப்-காமெடியன் க்ரிஸ் ராக் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இவரும் வில் ஸ்மித்திற்கு சளைத்தவர் அல்ல. தனது நகைச்சுவை திறமையால் இதுவரை பல விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கி குவித்திருப்பவர் இவர்.


என்னதான் பஞ்சாயத்து?


கடந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வில் ஸ்மித் தனது மனைவி ஜாடா பிங்கட் ஸ்மித்துடன் வந்திருந்தார். அலோப்பீசியா என்ற உடல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜாடா, தனது முடியினை இழந்துவிட்டார். இதனால், அவர் மொட்டை தலையுடன் காட்சியளித்தார். ஆஸ்கர் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள், நக்கலாக சில நகைச்சுவைகளைக் கூறி, விருது வழங்குபவரையும், விருது வாங்குபவரையும் மேடைக்கு அழைப்பது வழக்கம்.




அப்படி ஒரு சம்பவம்தான், அன்றும் நடந்தது. கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதுகளின் வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை வென்றிருந்தார். இந்த விருதினை வாங்குவதற்கு வில் ஸ்மித்தை மேடைக்கு அழைத்த க்ரிஸ், அவரது மனைவியின் முடி குறித்து ஜோக் அடித்து விட்டார். இதனைப் பொறுத்துக்கொள்ளாத வில் ஸ்மித், மேடயேரி, க்ரிஸ் ராக்கின் கன்னத்தில் ‘சப்’ என அரைந்து விட்டார். மேலும், சில கெட்ட வார்த்தைகளாலும், க்ரிஸ்சை வறுத்தெடுக்கவும் செய்தார். 


 






ஆஸ்கர் லைவ்வில் இப்படியொரு சம்பவம் நடந்தது, அகில உலக சினிமா ரசிகர்களிடையேயும், ஹாலிவுட் உலகிலும் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், பலர் வில் ஸ்மித்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், சிலர் அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வில் ஸ்மித்தும் ஆஸ்கர் நிகழ்ச்சியில் நுழைவதற்கு 10 வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  பிறகு, சிறிது கோபம் தனிந்த நிலையில், க்ரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதளத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட்டார். மேலும், க்ரிஸ்சிடம் பேசவும் முயற்சி செய்தார். ஆனால், அதற்கு தயாராக இல்லாததாக கூறி, க்ரிஸ் மறுத்து விட்டார்.