தமிழ் திரையுலகின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான விக்ரம் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் படத்தை அடிப்படையாக கொண்டு 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார். ரிலீசுக்கு தயாராக இருக்கும் அப்படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 62வது படம் குறித்த அப்டேட் ஒன்றை அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு. 


 



 


சியான் 62 அப்டேட் :


எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'வீர தீர சூரன் பாகம் 2' என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை தெறிக்கவிடும் பி.ஜி.எம்.முடன் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 



மளிகை கடை வியாபாரி :


நடிகர் விக்ரம் என்ட்ரி காட்சியையே மிரட்டலாக அமைத்துள்ளனர். ஒரு சாதாரண மளிகை கடை வியாபாரியாக விக்ரம் இருக்க அவரை பார்த்து ஒரு சில ரவுடிகள் கதிகலங்குகிறார்கள். மளிகை பொருட்களுக்கு நடுவே துப்பாக்கி, தோட்டா என தாக்குதலுக்கு தேவையான பொருட்களை மறைத்து வைத்து இருக்க, எதிரி தாக்க வருகிறான் என்பதை தெரிந்ததும் அதை லாவகமாக தயார் செய்து கொண்டு முகத்தை காட்டாமலே தாக்குதலுக்கு தயாராகிறார். 


 




எதிரிகள் ஓட்டம் :



விக்ரம் கவனம் முழுக்க தாக்குதல் மீது இருந்தாலும் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நியாயமாக நடந்து கொள்வது அவரின் நல்ல குணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முகத்தை காட்ட பயப்படுகிறான் என சொன்னதும் தன்னுடைய சுயரூபத்தை தோலுரித்துக் காட்டி எதிரியை கதிகலங்க செய்கிறார். கணுக்கால் தெறிக்க எதிரிகள் ஓட்டம் பிடிக்க மிரட்டலான ஆக்ஷன் பின்னணியில் மாஸ் மசாலா படமாக  'வீர தீர சூரன் பாகம் 2' படம் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 


 


முதலில் இரண்டாம் பாகம் :


மேலும் ஒரு சர்ப்ரைஸாக கைதி, காந்தாரா படங்களின் வரிசையில் 'வீர தீர சூரன்' படமும் முதலில் இரண்டாம் பாகம் வெளியாகிய பின்னரே முதல் பாகம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களுக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் முதலில் வெளியாவது பார்ட் 2 தான். இது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பல கெட்டப் இல்லாமல், வித்தியாசமான தோற்றம் இல்லாமல் நீண்ட நாட்களாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஒரு சாதாரண லுக்கில் விக்ரம் தோன்றுவது உற்சாகத்தை கொடுத்துள்ளது என கமெண்ட் மூலம் அவர்களின் சந்தோஷத்தை தெரிவித்து வருகிறார்கள். 



பண்ணையாரும் பத்மனியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண்குமார். அதை தொடர்ந்து சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரின் சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.