தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம். அபாரமான நடிப்பாற்றல் கொண்ட இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த தங்கலான் படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. நடிகர் விக்ரமிற்கு இன்று 58வது பிறந்த நாள் ஆகும்.


வீர தீர சூரன்:


அவரது 58வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சியான் 62 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பை ஒரு ஆக்‌ஷன் காட்சியுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான பி.ஜி.எம்.முடன் வெளியாகியுள்ள இந்த காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  






இந்த படத்தை இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்குகிறார். இவர் பண்ணையாரும் பத்மனியும் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். சேதுபதி, சிந்தாபாத் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக கடந்தாண்டு இவர் இயக்கிய சித்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வீர தீர சூரன் படம் பாகம் 2 என்று பெயரிட்டதன் மூலம் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்ததாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மளிகை கடைக்காரர் டூ ஆக்ஷன் நாயகன்:


மேலும் படத்தில் நாயகன் விக்ரம் சாதாரண மளிகை கடைக்காரராக உள்ளார். அதேசமயம், ரவுடிகளை மிரட்டுவதற்காக மளிகை கடையில் இருந்து துப்பாக்கியை எடுப்பது போல இன்று ஒரு காட்சி மட்டும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் விக்ரமிற்கு மிரட்டலான பிளாஷ்பேக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமத்து பின்னணியில் மிரட்டலான ஆக்ஷன் மசாலாவாக வீர தீர சூரன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. துருவ நட்சத்திரம் படமும் வெளியாகாமலே உள்ளது. தங்கலான் படம் மக்களவைத் தேர்தல் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு அடுத்தடுத்து விக்ரம் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 58 வயதான விக்ரம் தனது மாறுபட்ட நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்.