நாடாளுமன்ற தேர்தல் 


நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா அமோகமாக நடைபெற்று வருகிறது.


தேர்தல் புறக்கணிப்பு



புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200ம் கொடுக்கின்றனர். நேர்மையாக நடைபெற வேண்டிய இந்த தேர்தலை இவர்கள் கொச்சைப் படுத்திவிட்டனர்.


பணம் கொடுத்து ஜெயிக்கும் நிலைமை இருக்கிறது எங்களைப் போன்ற இளைஞர்கள் வாக்கிற்கு பணம் தராமல் நேர்மையான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் களத்தில் போராடி வருகிறோம், ஆனால் இவர்கள் பணம் கொடுத்து வாக்கினை பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் எனவே இந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளேன்” எனக் கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு அதிருப்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.