தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். விக்ரம் நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியானது. பின்னர், கொரோனா ஊரடங்கு, இரண்டாம் அலை காரணமாக உள்ளிட்ட பல காரணங்களால் அவரது படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.


அதேசமயத்தில், நடிகர் விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என்று மூன்று படங்களில் நடித்துவந்தார்.




கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், சீயான் 60 என்று அழைக்கப்பட்ட நடிகர் விக்ரமின் 60வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல்பார்வை 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த படத்தின் தலைப்பு மற்றும் முல் பார்வை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.






நடிகர் விக்ரம் நடிக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், நடிகர் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரம் நடித்துள்ளார்.


துருவ் விக்ரம் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்ட சூழலில், விக்ரம் நடிக்க வேண்டிய இறுதிகட்ட காட்சிகள் மட்டுமே பாக்கியிருந்தது. அதையும் படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் படமாக்கிவிட்டனர். கொல்கத்தா, மேற்குவங்காளம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக ஜனரஞ்சமாக உருவாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




7 ஸ்கிரின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தையும் லலித்குமாரே தயாரித்துள்ளார். விக்ரமின் நடிப்பில் மெகாஹிட் திரைப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதேபோல, கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்யா வர்மாவும் தோல்விப்படமாக அமைந்தது. இதனால், மூவரும் கட்டாய வெற்றியை பெற வேண்டிய சூழலில் இருப்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த படத்தின் நாயகிகளாக சிம்ரன், வாணிபோஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.