தமிழ் திரைத்துறையுலகின் பிரமாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படம், பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி, எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக நீண்ட ஆண்டுகளாக பல முன்னணி இயக்குநர்கள் முயற்சி செய்தனர்.

ஆனால் கடைசியாக அந்த வாய்ப்பு இயக்குநர் மணிரத்னத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. இரண்டு பாகங்களாகத் தயாராகும் இந்த படத்தை ஒரே கட்டத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.  மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும்  பொன்னியின் செல்வன் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

 

இப்படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, பார்த்திபன், விக்ரம், சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவிவர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் புதுச்சேரியில் தொடங்கியது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வந்த படப்பிடிப்பு,  சமீபத்தில் நிறைவடைந்தது.

 

இதனையடுத்து நேற்று (ஆக.18) பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பிற்காக மத்தியப் பிரதேசம் சென்றது படக்குழு. கோவில்கள், அரண்மனைகள் நிறைந்த  ஒர்ச்சா பகுதிக்கு,செல்வதாக பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். பொன்னியின் செலவன் படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். அதில் ஓர்ச்சா கோயில் முன் கேமரா இருப்பதுபோன்று இடம் பெற்றுள்ளது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


த்ரிஷா பதிவுசெய்த புகைப்படம்


 


பொன்னியின் செல்வன் படத்தில்  அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், ஆழ்வார்க்கடியான் நம்பியராக நடிகர் ஜெயராமும் நடிக்கின்றனர். அதேபோல் குந்தவையாக நடிகை த்ரிஷாவும், நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்து வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு குறித்தோ அல்லது படத்தின் அப்டேட்டை இயக்குநர் மணிரத்னம், வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.