சின்னத்திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை தக்கவைத்து இருப்பது சன் டிவி. அதில் ஒளிபரப்பாகும் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த ஒரு சீரியல் சித்தி 2. இந்த தொடரில் வெண்பாவாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ப்ரீத்தி சர்மா. சித்தி 2 சீரியல் முடிவுக்கு வந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் தலை காட்டாமல் இருந்த ப்ரீத்தி சர்மா தற்போது மீண்டும் சன் டிவியிலேயே ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

  



மலராக மாறும் வெண்பா :


வெண்பாவாக ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம் இப்போது மலராக புதிய  பரிமாணம் எடுக்க உள்ளது. சன் டிவியில் புதிய தொடராக பிப்ரவரி 27ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது 'மலர்' தொடர். இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான மலர் கதாபாத்திரமாக நடிக்கிறார் ப்ரீத்தி சர்மா. அவரின் ஜோடியாக நடிகர் இந்திரன் நடிக்கிறார். மேலும் இந்த தொடரில் துணை கதாபாத்திரங்களாக நிவிஷா, அக்னி மற்றும் ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 


மலையாள தொடர் சாந்த்வானம் ரீ மேக் :


மலையாள தொலைக்காட்சியில் 'சாந்த்வானம்' என தொடரின் ரீ மேக் தான் மலர் சீரியல். இந்த தொடரில் மலர் ஒரு புத்திசாலித்தனமான, தைரியமான, வளைந்து நெளிந்து கொடுக்காத ஒரு பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளாள். இப்படி ஒரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடிப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை ப்ரீத்தி சர்மா. நிச்சயமாக வெண்பா கதாபாத்திரத்தை போலவே மலர் கதாபாத்திரமும் ரசிகர்களால் வரவேற்கப்படும் என மிகுந்த நம்பிக்கையில் உள்ளார். 


வெளியான மலர் ப்ரோமோ :


மலர் சீரியலின் ப்ரோமோ சில தினங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த ப்ரோமோவில் மலர் தனது சகோதரியின் திருமணத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டு சடங்குகளை செய்யும் ஒரு கனிவான பெண்ணாக வருகிறார். மலரின் சகோதரி பார்வதியாக நடிகை நிவிஷா நடிக்கிறார். புதிய ஒரு சீரியலுக்காக சன் டிவி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.