முதன்முறை உடலுறவு கொள்வது, அதனைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்கள் ஆகியவை குறித்து பாடகி சின்மயி பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மீ டூ விவகாரம் தொடங்கி சமூக வலைதளங்களில் சைபர் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுப்பது வரை தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாக இருந்து வருபவர் பாடகி சின்மயி.
தொடர் சர்ச்சைகள்
தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அறிமுகமாகி தன் முதல் பாடலிலேயே கவனமீர்த்தவர் பாடகி சின்மயி. ’ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த சின்மயி, குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவின் பிரபல பாடகிகளுள் ஒருவராக உருவெடுத்தார்.
தொடர்ந்து பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளராக வலம் வரத் தொடங்கிய சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு, டப்பிங் யூனியனில் தடை விதிக்கப்பட்டது என தொடர்ந்து பரபரப்பு வளையத்தில் சிக்கி வலம் வரத் தொடங்கினார்.
எனினும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து ஆக்டிவாக வலம் வரும் சின்மயி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாகவும் சைபர் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
’பெண்களே வெளிப்படையாக பேசுங்கள்’
அந்த வகையில் முதன்முறை உடலுறவு கொள்வது, அதனைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்கள் ஆகியவை குறித்து சின்மயி பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
”முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது ரத்தப்போக்கு ஏற்பட்டதற்கு கன்னிப் பெண்களை கொண்டாடப்படுகிறார்கள். உண்மையில், இந்தப் பெண்கள் பெரிய மருத்துவப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். சில பெண் வெறுப்பு கொண்ட ஆண்களால் கொண்டாடப்படுவதற்கு பதிலாக, இந்தப் பெண்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் . இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கு பெண்கள் பயப்பட வேண்டாம்.
’ஆபாசப் படத்தில் பாலியல் கல்வி பெறாதீர்கள்’
பெண்களுக்கு முதல் முறையாக உடலுறவின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டால், அவர்களின் பிறப்புறுப்பு இறுக்கமாக உள்ளது என அர்த்தம். இதைக் கருத்தில் கொண்டு இந்த பெண்கள் உடலுறவுக்குத் தயாராக இல்லை என்று முடிவு செய்யலாம். மேலும் அவர்கள் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும்.
மக்கள் பாலியல் பற்றிய அறிவை ஆபாசப் படங்களிலிருந்து பெறக்கூடாது, ஏனெனில் அவை தவறான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டவை. வயது வந்தோருக்கான படங்களில் காட்டப்படும் உடலுறவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. இது புரிந்து கொள்ளப்படாவிட்டால் தம்பதிகளுக்கு இடையே பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆபாசப் படங்கள் மீதான போதை ஒரு முக்கியமான பிரச்சினை. சரியான சிகிச்சைக்கு உளவியல் தலையீடு தேவை” என்றும் சின்மயி பேசியுள்ளார்.
பெண்களின் பாலியல் இன்பம், அவர்களின் உடல் மீது சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளைக் களையும் வகையில் சின்மயி பகிர்ந்துள்ள இந்த வீடியோ ஒரு தரப்பினரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மற்றொருபுறம் இந்தப் பிரச்னைகளைப் பேசுவதற்கு நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று வழக்கம்போல் சின்மயிக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.