நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் பாடலாக ‘சில்லா சில்லா’ வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 


போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இதில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். 






துணிவு படம் பொங்கல் பண்டிகையையொட்டி நிச்சயமாக வெளியாகும் என்ற தகவல் முன்பு வந்தது. அதன் பின், டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று படத்தின் முதல் சிங்கிளாக சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இன்று காலை வந்த அப்டேட்டில், சில்லா சில்லா பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதிரவைக்கும் இப்பாடல் சற்று தாமதமாக 6.30 மணிக்கு வெளியாகியுள்ளது.


அஜித்தின் ரசிகர்கள், பலர் இப்பாடலின் ரிலீஸை  திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். படத்தில் வரும் பாடலையெல்லாம், தியேட்டரில் திரையிட்டு பிரம்மாண்டமாக கொண்டாடுவதை பார்க்கும் போது, அஜித் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.






அத்துடன், லண்டனில் துணிவு படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் டேட் குறித்து வெளிநாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் தெரிவித்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.







சில்லா சில்லா பாடல் உருவான கதை
 
ஆலுமா டோலுமா போன்ற ஒரு மாஸான ட்ராக் ஒன்றுக்கு நடிகர் அஜித் டான்ஸ் ஆட அந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடினால் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் ஹெச். வினோத்திடம் ஜிப்ரான் சொல்ல அதை இயக்குநர் எஸ்எம்எஸ் மூலம் அனிருத்துக்கு அனுப்ப இந்த டீலை உடனே ஒகே செய்துவிட்டாராம் அனிருத். அடுத்த நாளே ரெக்கார்டிங் நடந்தேறியுள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கிய ரெக்கார்டிங் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு முடிந்துள்ளது. சில்லா சில்லா... என தொடங்கும் இந்த பாடல் வரிகளை வைசாக் எழுதியுள்ளார். ஐந்து வருடங்கள் கழித்து அஜித் குமாரின் படத்திற்காக அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.