தமிழ் சினிமாவில் 1984ம் ஆண்டு தாவணிக் கனவுகள் படம் மூலமாக சிறிய வேடத்தில் அறிமுகமாகி தனது அயராத உழைப்பு மூலமாக தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக உயர்ந்தவர் மயில்சாமி. இவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


ஈடு செய்ய முடியாதது:


அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் மயில்சாமி, தன் ஒலிநாடாக்கள் மூலம் அறிமுகமானவர்.


காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்பட்டார். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.”


என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.


அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்:


மயில்சாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பார்த்திபன், ட்ரம்ஸ் சிவமணி உள்பட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


57 வயதான மயில்சாமி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அசத்தியுள்ளார். விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் மறக்க முடியாத பல காமெடி காட்சிகளில் மயில்சாமி அசத்தியுள்ளார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி நல்ல மிமிக்ரி கலைஞராகவும் மயில்சாமி முன்னோடியாக திகழ்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், அரசியல் விவாதங்களிலும் பங்கேற்றுள்ள மயில்சாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார்.


மேலும் படிக்க: Actor Mayilsamy Death: "மயில்சாமி மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு.." ஆளுநர், பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்


மேலும் படிக்க: Mayilsamy Politics: எம்.ஜி.ஆர். பக்தன்... சமூக சேவகன்! - கொடைவள்ளல் மயில்சாமியின் அரசியல் பார்வை எப்படி?