மறைந்த நடிகர் மயில்சாமி திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வந்த நேரத்திலும் கூட, அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார்.


எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு


எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, தன்னை எம்.ஜி.ஆரின் பக்தன் எனவே குறிப்பிட்டுக் கொண்டார். ‘என் அம்மா அப்பாவை விட எனக்கு எம்ஜிஆர் தான் முக்கியம்’ என பல மேடைகளில் பேசியுள்ளார். வழக்கமாக எம்.ஜி.ஆரின் பெயரை வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்துபவர்களை போன்று இல்லாமல், எம்.ஜி.ஆரை தெய்வமாக கருதியதோடு, அவர் பாணியிலேயே பலருக்கும் மயில்சாமி உதவி செய்து வந்தார். எம்.ஜி. ஆர் இறந்த பிறகும் கூட, அவரை தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்றுக்கொள்லவில்லை எனவும் கூறியுள்ளார். 


அதிமுகவில் இருந்து விலகல்:


எம்.ஜி.ஆர். மீது கொண்ட பற்றால் மயில்சாமி அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். ஆனால், ஜெயலலிதா இறந்த பிறகு அந்த கட்சியில் இருந்து விலகிய அவர், வேறு எந்த கட்சியிலும் இணையாமல் தன்னால் முயன்ற சமூக சேவைகளை செய்து வந்தார். அதோடு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பல்வேறு கருத்துகளை முன்வைத்து வந்தார்.


பெட்ரோல் பரிசு:


கடந்த 2021ம் ஆண்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மயில்சாமி, புதுமண தம்பதிகளுக்கு கேன் நிறைய பெட்ரோலை பரிசாக வழங்கி கவனம் ஈர்த்தார். எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து அவர் செய்த இந்த செயல், சிந்திக்கவும் செய்தது. அதை பின்பற்றி பலரும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், பெட்ரோலை பரிசாக வழங்க தொடங்கினர்.


மோடிக்கு எதிர்ப்பு, ஸ்டாலினுக்கு வரவேற்பு:


நூதன பரிசு குறித்து கேட்டபோது, “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் விலை உயர்வு குறித்தும் யாரும் நினைத்து பார்ப்பதும் இல்லை. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகவே இப்படி செய்தேன். அதே நேரம் தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என மயில்சாமி கூறியிருந்தார். 


தேர்தலில் போட்டி:


யாரும் எதிர்பாராத விதமாக கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், தான் வசித்து வரும் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மயில்சாமி சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் வெறும் 1,440 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதற்காகவெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத மயில்சாமி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.


உதவும் மனப்பான்மை:


கொரோனா காலத்தில் பலரும் வெளியிலேயே வர அஞ்சிய நேரத்தில் மயில்சாமி வீடு வீடாக சென்று, சக மனிதருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தார். அதோடு, சென்னை பெருவெள்ளம் காலத்திலும் களத்தில் இறங்கி, பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.