இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட ‘Chhello Show’ படத்தில் நடித்த 15 வயது சிறுவனான ராகுல் கோலி உயிரிழந்துள்ளார்.
ஆஸ்கர் விருதுகள் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்காக பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் சிறந்த திரைப்படங்களை பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் அண்மையில் இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவுக்காக குஜராத்தி மொழியில் வெளியாக உள்ள ‘Chhello Show’ என்ற திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரைத்தது.
காணாமல் போன குழந்தை நட்சத்திரம்
‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் ஆஸ்கர் போட்டியில் இருந்த நிலையில், இந்தப்படம் தேர்வானது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகுல் கோலி உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக லுகேமியா நோயுடன் (இரத்தம் அல்லது எலும்பு மச்சத்தில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய்) போராடி வந்த அவரது உயிர் பிரிந்தது.
தந்தை பேட்டி
இது குறித்து அவரது தந்தையான ராமு கோலி கூறும் போது, “ ராகுலின் இறுதிச்சடங்கிற்கு முன்னர் நாங்கள் குடும்பத்தோடு அவன் நடித்த ‘Chhello Show’ படத்தை பார்க்க இருக்கிறோம். இந்தப்படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை உணவை சாப்பிட்ட அவன் காய்ச்சலால் அவதிப்பட்டான். அதனைத்தொடர்ந்து மூன்று முறை இரத்த வாந்தி எடுத்தான். தற்போது அவன் இல்ல. எனது குடும்பம் நிலைகுலைந்து போய் இருக்கிறது.
பிரார்த்தனை கூட்டம்
ராகுலின் குடும்பத்தினர் ராகுலின் சொந்த ஊரான குஜராத் ஜாம்நகர் அருகே உள்ள ஹப்பா கிராமத்தில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். அவர்கள் கூறும் போது, “ பிழைப்புக்காக ஆட்டோரிக்ஷா ஓட்டும் ராகுலின் தந்தை, தனது மகன் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அக்டோபர் 14 (திரைப்படத்தின் வெளியீட்டு தேதி) பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அதற்கு முன்னரே எங்களை ராகுல் பிரிந்து விட்டார்” என்று கூறினர். ‘Chhello Show’ படத்தில் மனு என்ற கதாபாத்திரத்தில் ராகுல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.