நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு ரத்து:


கடந்த 2014ம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சியில், தணிக்கைத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் எச்சரிக்கை வாசகம் இல்லை என வழக்கு தொடரப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான வண்டர் பார், நடிகர் தனுஷ் மற்றும் சக தயாரிப்பாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக,  பொதுசுகாதாரத்துறை இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


வழக்கு விசாரணை:


இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சார்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


தனுஷ் தரப்பு வாதம்:


இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்தநிலையில், அந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது ”சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பர தடை மற்றும் வர்த்தக விநியோகம் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த புகார் உகந்தது அல்ல. இந்த விதி புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்” தனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது.


உயர்நீதிமன்றம் உத்தரவு:


சிகரெட்டை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை என்றும், விளம்பரம் என்று கூறப்படும் காட்சி படத்தினுடைய தயாரிப்பாளருக்கு எதிராகவோ அதிலுள்ள கலைஞர்களுக்கு எதிராகவோ பொருந்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. படத்தை ஏற்கனவே தணிக்கை செய்த நிலையில், மீண்டும் தணிக்கை செய்ய முடியாது. அதோடு, புகார் தெரிவிக்கும் முன்பு தங்களிடம் எந்தவித விளக்கமும் கோரப்படவில்லை எனவும், தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


தனுஷ் படங்கள்:


தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதைதொடர்ந்து, தானே இயக்கி, நடிக்கும் தனது 50வது படத்திற்கான பணிகளை தனுஷ் தொடங்கியுள்ளார்.