தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,  தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் 12 மற்றும் 13 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


14.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


15.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை வெயில் கொளுத்திய நிலையில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நகரம் முழுவதும் மாலையில் நல்ல மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மேடவாக்கம், திருவான்மியூர், கிண்டி, கிழக்கு கடற்கரை சாலை,  அடையார், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் மழை பெய்தது. இந்த நிலை இனி அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. நேற்றைய தினம் தமிழ்நாடில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை கடந்து பதிவானது. கடந்த சில வாரங்களாக வெப்பநிலை குறைந்து வந்த நிலையில் நேற்று பல் இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் இதனை தணிக்கும் வகையில், மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.