நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்துக்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது. அதேபோல், காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு படத்தை திரையிட அனுமதி கோரியதிலும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


இன்னும் ஒரே நாள்..


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக “லியோ” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அக்டோபர் 19 படம் வெளியாகும் நிலையில், 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் அன்றைய தினத்துக்கான டிக்கெட்டுகள் கிட்டதட்ட விற்று தீர்ந்து விட்டது. முதல் நாளிலும் அனைத்து காட்சிகளும் டிக்கெட்டுகள் காலியாகி விட்ட நிலையில், சில தியேட்டர்கள் இன்னும் டிக்கெட் முன்பதிவை தொடங்கவில்லை. 


முதல் நாள் முதல் காட்சி..


அப்படியே டிக்கெட்டுகளை விற்கும் தியேட்டர்களும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு காரணம் லியோ படத்துக்கு சிறப்பு காட்சிகள் கேட்டு தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் காலை 4 மற்றும் 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கிட்டதட்ட 10 மாதங்களாக எந்த படங்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் லியோ படத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் கடும் விமர்சனங்களை சந்தித்தது. 


இதனைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு ஒரு சிறப்பு காட்சி சேர்த்து மொத்தம் 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்தது. மேலும் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும். இரவு 1.30 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. சிறப்பு காட்சிக்கு வழங்க அனுமதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதற்கிடையில் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய லியோ படத்தின் ஒரு காட்சி முடியவே இடைவேளை, ரசிகர்கள் உள்ளே வருவது, வெளியேறுவது, காட்சிகளுக்கு நடுவே சுத்தம் செய்வது போன்ற நிகழ்வுகளை சேர்த்து கிட்டதட்ட ஒரு காட்சிக்கு 3.45 மணி நேரம் ஆகிவிடும். அரசு கொடுத்த நேரத்தில் 5 காட்சிகள் எல்லாம் திரையிடுவது சாத்தியக்கூறு இல்லை என்பதால் தியேட்டர் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவலும் வெளியானதால் ரசிகர்கள் குழம்பி போயினர். 


உயர்நீதிமன்றத்தில் வழக்கு 


இந்நிலையில் லியோ படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என கூறி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நேற்று (அக்டோபர் 16) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 


மதியம் விசாரணைக்கு வந்த போது இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அனுமதி கொடுக்கப்படும் பட்சத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் நாள் ஒன்றுக்கு 6 காட்சிகள் திரையிட நேரம் இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்க செய்யுமாறு உத்தரவிட்டதோடு இன்று (அக்டோபர் 17) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். 


சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு 


இந்நிலையில் லியோ படத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் பேசிய நீதிபதி அனிதா சுமந்த், “லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் முடிவை தமிழ்நாடு அரசிடம் விட்டு விடுவதாக கூறினார். அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணிக்குன் தான் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்பதால் அதனை மீற முடியாது. அக்டோபர் 19 மற்றும் 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கட்டும். இதுகுறித்து தயாரிப்பு தரப்பு முறையீட வேண்டும். இதற்கு நாளை (அக்டோபர் 18) மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.