இன்று சினிமாத்துறையின் முக்கிய சங்க பொறுப்புகளை நிர்வகிக்கும் விஷால், முதன் முதலில் சினிமாவில் அறிமுகமான நாள் இன்று. அது ஒன்றும், 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அல்ல. 2004 ம் ஆண்டு , அதாவது 18 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் நுழைந்து, இன்று தமிழ் சினிமாவை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் விஷாலுக்கு, அவர் அறிமுகமான செல்லமே திரைப்படம் தான் அதற்கான அடித்தளம் போட்டது. 


பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகனான விஷால், 1989ல் ஜாடிக்கேத்த மூடி என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். வளர்ந்த பின், விஷால் ஒரு இயக்குனராக பணி தொடரவே விரும்பினார். அதற்காக நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால், காலம் அவரை நடிகராக்கியது. 






காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் , சுஜாதா வசனம் எழுதிய செல்லமே படத்திற்கு வருமான வரித்துறை அதிகாரியாக வாட்டசாட்டமான ஒரு ஆள் தேவைப்பட, அதற்கு விஷாலை தேர்வு செய்தார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா. சி.ஜே., சினிமா தயாரிப்பு, ஹாரீஸ் ஜெயராஜ் இசை, கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு என முதல்படமே தலைசிறந்த கலைஞர்களால் உருவானதில், விஷால் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான். 






ரீமா சென், பரத், விவேக் என நடிகர்கள் தேர்வும் ரிச்சாக இருந்தது. அதில் விஷால் மட்டுமே புதிய முகமாக இருந்தார் என்று கூட சொல்லலாம். நல்ல கதை, நல்ல இசை, நல்ல திரைக்கதை என எல்லாமே கைசேர , செல்லமே குறைந்த பட்ஜட்டில் நிறைவான வருவாய் தந்தது. வித்தியாசமான காதல் கதையை மையமாக கொண்டு ஓடிய செல்லமே பாடல்கள், பலரின் விருப்ப ப்ளேலிஸ்ட் ஆக இன்றும் இருந்து வருகிறது. 


18 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியாகி செல்லம், உண்மையில் விஷாலுக்கு செல்லமான படம் தான். தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு அதிகார பதவிகளுக்கு அரியணை ஏறிய விஷால் அறிமுகமான நாளும் இது தான் என்பதால், சினிமா ரசிகர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய நாளே!