ரம்யா பாண்டியன் ஜோக்கர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர். அந்த திரைப்படம் பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தாலும், ரம்யா பாண்டியனின் இயல்பான நடிப்பு படம் பேசிய காரசார அரசியலின் முன்பு பெரிதாக பேசப்படாமல் போனது. அதன் பிறகு பெரிய பட வாய்ப்புகளும் இல்லாமல் தான் இருந்தார். அந்த நிலையில் தான் வெகுண்டெழுந்து சாரீ போட்டோஷூட் ஒன்று நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட துவங்கினார். அந்த கவர்ச்சி படங்கள் பரபரவென வைரலாக, ரம்யா பாண்டியனின் மவுசு கூடியது. அது போதாதென்று விஜய் டிவியின் தருமாறு ஹிட்டான குக் வித் கோமாளி ஷோவின் முதல் சீசனில் பங்குகொண்டு அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். ஃபைனல் வரை சென்ற அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். இந்த வாய்ப்பை அப்படியே விட்டுவிட கூடாதென்று பிக்பாஸ் சீசன் 4 லும் கலந்து கொண்டார். அதில் புத்திசாலித்தனமாக விளையாடி ரன்னர் அப் வென்று வெளியில் வந்தார். அதன் பிறகு படவாய்ப்புகள் வாசலில் கொட்டி கிடந்தன. அவற்றை அள்ளிக்கொள்ளமல் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.



அதில் ஒரு படம்தான் 2டி புரொடக்ஷன்ஸ் நடிகர் சூர்யா தயாரிப்பில் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம். அரிசில் மூர்த்தி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்து இருக்கிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தனது சகோதரியான ரம்யா பாண்டியனை வாழ்த்தியுள்ளார். கீர்த்தி பாண்டியன் ஹெலன் மலையாள திரைப்பட தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து பிரபலமடைந்தவர். அவர் ட்விட்டரில் வாழ்த்தி பதிவிட்டிருக்கும் டிவீட்டில், "உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன், யக்கோவ்… 'ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' திரைப்படத்தின் வீராயி கதாபாத்திரத்தை எளிதாகவும் அழகாகவும் கொண்டு வந்துள்ளாய், பெரிய விஷயங்கள் உன்னை தேடி வரும் கண்மணி, மிக்க மகிழ்ச்சி" என்று தான் சகோதரி ரம்யா பாண்டியனை வாழ்த்தியிருந்தார். 



மேலும் திரைப்படம் குறித்து, "வாணி போஜன் செய்யும் எல்லாவற்றிலும் அழகை கொண்டு வந்துவிடுவார், மிதுன் மாணிக் உண்மையாகவே மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். என்னை மிகவும் பாதித்தது படத்தில் வரும் ஒரு கிழவி கதாபாத்திரம், திரைப்படத்தின் சிறந்த விஷயங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும் அவர் வசனங்கள், இப்படி ஒரு யதார்த்த திரைப்படத்தை, இப்படி ஒரு கதையை கொடுத்த அரிசில் மூர்த்திக்கு மிக்க நன்றி. கிரிஷ்ஷின் இசை மிகவும் புதிதாக இருந்தது. ராஜசேகர் பாண்டியன் அண்ணா, 2டி என்டர்டைன்மெண்ட்ஸிடம் இருந்து மற்றுமொரு நல்ல திரைப்படம், வாழ்த்துக்கள் அண்ணா." என்று டிவீட்டியிருந்தார்.


இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ள ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் ஏற்கனவே மக்களிடையே ஏற்கனவே நல்ல கமெண்ட்ஸை பெற்றுவருகிறது. இந்த திரைப்படம் 2டி என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ளது.