சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நான் சரியாக நடிக்கவில்லை என்ற குற்ற உணர்வு இருக்கிறது என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.


நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை எப்போதும் புகழின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. வில்லன், தாத்தா, தாதா, திருநங்கை என இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை தொடர்ந்து கோலிவுட்டின் மக்கள் செல்வனாக வைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் 2021 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா கடந்த வருடம் அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற்றது. அதில், நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் ‘ஷில்பா’ என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கிடைத்தது. நடிகர் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து விருதை அளித்து வாழ்த்து பெற்றார். தியாகராஜன் குமாரராஜாவும் விஜய் சேதுபதிக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் கூறி மீண்டும் தேசியவிருதை அணிவித்து மகிழ்ந்தார். இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் நடிப்பு அந்த படத்தில் பலரால் வெகுவாக பாராட்டப்பெற்றது. அந்த அளவுக்கு ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கி இருப்பார். 



ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதி தான் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சரியாக நடிக்கவில்லை, அது எனக்கு குற்ற உணர்வு தருகிறது என்று கூறியிருக்கிறார். அவர் பேசுகையில், "போன வருஷம் மார்ச்ல வந்த லாக்டவுன்னு நெனைக்குறேன், ஒரு வீடியோ பாத்தேன். ஒரு திருநங்கை ஒருதங்க, ஷாக்ஷின்னு பேரு, அவங்க கொஞ்சி பேசிட வேணாம் பாட்ட பாடுறாங்க. ரெண்டு வாய்ஸ்சும், ஆண் குரலும் பெண் குரலும் பாடறாங்க. அத பாத்ததுல இருந்து எனக்குள்ள குற்ற உணர்ச்சி. நான் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை செய்திருக்கிறேன் என்று மிகவும் கஷ்டமாகிவிட்டது. நான் என் பொண்டாட்டிகிட்ட பொலம்பிட்டே இருப்பேன், நான் என் வேலைக்கு நேர்மையா இல்ல, நான் ஏமாத்திருக்கேன், இதை குமாரராஜா சார் கிட்ட சொல்லியே ஆகணும்னு சொல்றேன். அவரு எப்போ சொன்னாலும், நீங்க நல்லா பன்னிருக்கீங்க ஐயான்னு சொல்லி முடிச்சுருவாரு. அப்போ நான் இந்த விடியோவ பாருங்கன்னு சொன்னேன், அதெல்லாம் இல்ல நமக்கு உள்ள இருந்து ஒன்னு வரும்ல, அதுதான் முக்கியம்னு சொல்லிட்டார். அதெல்லாம் சரி தான் ஐயா, உண்மை தான் ஒத்துக்குறேன். ஆனா இந்த ஒரு வீடியோவ ஒரே ஒரு முறை பாருங்கன்னு சொன்னேன். அவரு பாத்தாரு. பாத்துட்டு அவரும் ஒத்துகிட்டாரு." என்றார்.






இந்த வீடியோவை அந்த திருநங்கை ஷாக்ஷி ஹரேந்திரனே ட்விட்டரில் ஷேர் செய்து விஜய் சேதுபதியின் குணத்தை பாராட்டி இருந்தார். இந்த விடியோவை பதிவிட்டு அவர் எழுதியது, "கொஞ்சி பேசிட வேணாம் பாடலை நான் பாடியதை விஜய் சேதுபதி கண்டார் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதையும் தாண்டி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவரது கேரக்டரை மதிப்பிட என்னை ரெபரன்ஸாக எடுத்துக்கொண்டது என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. என் வீடியோவை பார்த்ததற்கும், என் பெயரை ஞாபகம் வைத்திருந்ததற்கும் நன்றி விஜய் சேதுபதி, லவ் யூ மோர்." என்று பதிவிட்டிருக்கிறார்.