இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது. 


 


இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசி அசத்தினார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கடைசி வரை ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 175 ரன்களுடன் இருந்தார். இதனால் ரோகித் சர்மா டிக்ளேர் செய்ததை பலரும் ட்விட்டரில் விமர்சனம் செய்து வந்தனர். 


 






இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த ஆடுகளத்தில் பந்து சரியாக எழவில்லை. ஆகவே இந்த நேரத்தில் ஏற்கெனவே சோர்வுடன் இருக்கும் இலங்கை வீரர்களை பேட்டிங் செய்ய வைத்தால் விக்கெட் எடுக்க சாதகமாக இருக்கும். அத்துடன் சுழற்பந்துவீச்சுக்கும் ஆடுகளம் சாதகமாக மாறியதை நான் உணர்ந்தேன். எனவே உடனே இலங்கை அணியை பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்று நான் கூறினேன். அவர்கள் 5 செசன் வரை ஃபில்டிங் செய்திருப்பதால் மிகுந்த சோர்வுடன் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது அவர்களால் சரியாக கணித்து ஆட சில நேரம் தேவைப்படும். அதை நம்முடைய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று நான் நினைத்தேன்” எனக் கூறியுள்ளார். 


 


இதன்மூலம் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய தான் முக்கிய காரணம் என்று ஜடேஜா தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2004ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தப் போது முல்தானில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களுடன் களத்தில் இருந்தார். அந்த சமயத்தில் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். தற்போது ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளதால் அதை பலரும் சுட்டிக்காட்டி பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் ரவீந்திர ஜடேஜாவின் பதில் அதை தெளிவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:இந்தியா, பாக்., மோதும் மகளிர் உலகக் கோப்பை! சாதனையை தக்கவைக்குமா மித்தாலியின் படை !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண