உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினின் மகள் ஜோசஃபின் சாப்ளின் கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சார்லி சாப்ளின்
நகைச்சுவை என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சார்லி சாப்ளின்தான். நடிகராக மட்டுமில்லாமல் தனது படங்களை தானே இயக்கவும் செய்தவர் சார்லி சாப்ளின். த டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் ஆகியப் படங்களில் தனது நகைச்சுவையால் மிகப்பெரிய அரசியல் கருத்துக்களைப் பேசியவர்.
தனது காமிக்கலான உடல்மொழியால் இன்றுவரை நிகரற்ற ஒரு கலைஞனாக சாப்ளின் கருதப்படுகிறார். அதிகாரத்தை கேள்விகேட்பதற்கு நகைச்சுவை ஒரு சிறந்த கருவி என்று தனது படங்களின் மூலம் நிரூபித்தார் சாப்ளின்.
சிட்டி லைட்ஸ், த கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ், சார்லி அண்ட் சாக்லெட் ஃபாக்டரி, முதலிய படங்கள் எல்லா காலத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஜோசஃபின் சாப்ளின்
சார்லி சாப்ளின் மற்றும் அவரது மனைவியான ஊனா ஒ நீலுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர் ஜோசஃபின் சாப்ளின். 1949ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்தார். 1952ஆம் ஆண்டு வெளியான தனது தந்தையின் படமான ‘த லைம் லைட்’ படத்தில் முதல் முறையாக நடிக்கத் தொடங்கினார் ஜோசஃபின். இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற படமான ‘த காண்டம்பரி டேல்ஸ்’ படத்தில் நடித்தார். 1984ஆம் ஆண்டு வெளியான ‘த பே பாய்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தனது தந்தையுடன் ஜோசஃபின் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. தனது சிறு பருவம் தொடங்கி தனது வளர் பருவம் முழுவதும் தனது தந்தைக்கு நெருக்கமானவராக இருந்தார் ஜோசஃபின் சாப்ளின். மேலும் தனது தந்தையின் மறைவுக்குப்பின் அவரது அலுவகத்தைப் பராமரித்து வந்தார்.
திடீர் மரணம்
பாரிஸில் வசித்து வந்த ஜோசஃபின் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது 73ஆவது வயதில் திடீரென உயிரிழந்தார். ஜோசஃபினுக்கு தற்போது மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதுமுள்ள சார்லி சாப்ளின் ரசிகர்கள் ஜோசஃபினுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.