மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி முதலை கண்ணீர் வடிப்பதாக விமர்சித்து, தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடங்காத மணிப்பூர் தீ..!


மணிப்பூரில் பழங்குடியினர் பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என மெய்தி சமூக மக்களும், அவ்வாறு செய்யக்கூடாது என குக்கி இன மக்களும் நடத்திய போராட்டம் கடந்த மே மாதம் வன்முறையாக மாறியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு நீடிக்கும் இந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்ற பிறகும் கூட எந்த பலனும் இல்லை. இந்நிலையில் தான் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற கோர சம்பவங்கள் தொடர்பான ஆதரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. இதனால், மணிப்பூரில் பதற்றம் உச்சநிலையை அடைந்துள்ளது. அடுத நொடி என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற பதற்றத்தீ அங்கு பற்றி எரிந்துகொண்டுள்ளது.


மவுனம் கலைத்த மோடி:


பாஜக ஆளும் மணிப்பூரில் 78 நாட்களாக கலவரம் நீடித்து வந்தாலும் பிரதமர் மோடி அதுதொடர்பாக எந்தவொரு கருதையும் கூறாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் தான் பழங்குடியின பெண்களுக்கு எதிரான கொடூரம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தொடங்கியது. அந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதன்முறையாக மணிப்பூர் கலவரம் தொடர்பாக பேசிய மோடி, குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மொத்தமாக மணிப்பூர் கலவரத்திற்காக 39 விநாடிகள் ஒதுக்கி பேசியிருந்தார்.


விமர்சித்த தி டெலிகிராஃப்:


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தி டெலிகிராஃப் செய்தித்தாள் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், ரட்சத முதலை ஒன்றி கண்ணீர் வடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அதோடு, 78 முதலைகளின் படங்களும் கீழே வழங்கப்பட்டு, அந்த 78 நாட்களில் முதமை அமைதியாக இருப்பதை போன்றும், 79வது நாளில் மட்டும் கண்ணீர் வடிப்பதை போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் “வலியும், அவமானமும் 56 இன்ச் சதையை துளைக்க 79 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன” என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடியை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளது.




மோடியை விமர்சித்த தி டெலிகிராஃப் செய்திதாள் (courtesy: the telegraph) 


கொண்டாடப்படும் மோடி:


2014ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற போது இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் அவரை கொண்டாடி மகிழ்ந்தனர். அதைதொடர்ந்து, பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலக தலைவர்கள் உடன் நெருக்கம் காட்டி சர்வதேச விவகாரங்களில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்தார். டைம்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஹெரால்ட் போன்ற சர்வதேச இதழ்கள் கூட, வலிமை வாய்ந்த தலைவர் என மோடியை பாராட்டி செய்தி வெளியிட்டன.


மாறும் மோடியின் பிம்பம்?


ஆனால், சமீப காலமாக இந்தியாவில் நிலவும் மதங்கள் தொடர்பான பிரச்னைகள், சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல், பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல், ஜனநாயக மாண்பு, கருத்துரிமை பறிப்பு தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக மோடியை உலகின் வலிமையான தலைவர் என குறிப்பிட்ட பிரிட்டிஷ் ஹெரால்ட், மோடியின் ஆட்சியில் ஜனநாயம் படுகுழியில் விழுந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்து இருந்தது. அதேபோன்று மோடியின் ஏன் முக்கியமானவர் என கூறியிருந்த டைம்ஸ் இதழ் ”இந்தியாவை பிளவுபடுத்துபவர் மோடி” என அண்மையில் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தகக்து.