கடந்த 2005 ஆம் ஆண்டு  நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில்  வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 800 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். அந்த வகையில் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


 



 


பெரிய திரை பட்டாளம் :


சந்திரமுகி 2வில் ஹீரோவாக நடிக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றதாக தகவல் ஏற்கனவே வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர் வடிவேலு, ராதிகா சரத்குமார், விக்னேஷ், லட்சுமி  மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்தது போலவே இரண்டாவது பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் வடிவேலு. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் புகழ் இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஆர்.டி. ராஜசேகர் மேற்கொள்ள கலை இயக்கத்தை கவனிக்கிறார் தோட்டா தரணி.  


 



சந்திரமுகியாக சர்ச்சை நாயகி :


சந்திரமுகி 2ம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வமான தகவல் ஏற்கனவே வெளியானது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். படத்தின் நடிகர் நடிகைகள் ஒன்றாக அமர்ந்து இருக்கும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


கூடுதல் எதிர்பார்ப்பு :


சந்திரமுகி படத்தின் முதல் பாகம் அமோக வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.