சென்னை தியாகராய நகரில் உள்ள வித்யோதயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மு.க. ஸ்டாலின், ”கலைஞரை பொறுத்தவரையில் பள்ளி படிப்பை மட்டுமே முடித்துவிட்டு அரசியல் ஈடுபாடு காரணமாக கல்லூரிக்கு செல்லவில்லை. ஆனால் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கியுள்ளார். இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாக இருந்தவர். அவர் பிறந்த வருடத்தில் உருவான இந்த பள்ளி இன்று நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. சுதந்திரத்திற்கு முன்னே சுதந்திர  இந்தியா எப்படி இருக்கும் என காந்தி கனவு கண்டார். அது அனைவருக்கும் பொதுவான நாடாக இருக்க வேண்டும். சாதி மத வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இந்தியர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். கதர் தொழில் முன்னேற்றம் காண வேண்டும் என நினைத்தார். தன்னுடைய சீடர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் அதிக சீடர்கள் கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்நாளில் 22 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தவர் மகாத்மா காந்தி.  அவரது சீடர்களில் ஒருவரான ஈ.எஸ் அப்பாசாமியால் உருவாக்கப்பட்டது தான் இந்த வித்யோதயா பள்ளி.


1920ஆம் ஆண்டு நீதிகட்சி காலத்தில் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டது. அப்போது சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பெண்களுக்காக தனி பள்ளி தொடங்க முடிவு செய்து இந்த பள்ளி ஈ.எஸ் அப்பாசாமியால் தொடங்கப்பட்டது. இதற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி வழங்கினார். பெண்கள் படிக்க வெளியே அனுப்பக்கூடாது என கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் பெரும் புரட்சியை எற்படுத்தியது இந்த பள்ளி. அந்த பழமைவாத கருத்துக்களை மீண்டும் கொண்டு வர நினைப்பவர்கள் இன்றும் இந்த சமுதாயத்தில் உள்ளனர். பெண்களை வீட்டிற்குள் ஒடுக்க வேண்டும், போராடி உரிமைகளை பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து மீண்டும் அந்த உரிமையை பறிக்க வேண்டும் என நினைப்பவர்களின் பிழைப்புவாத  கருத்துக்களை குப்பையில் போட்டுவிட்டு படிக்க வேண்டும். கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து” மாணவர்களிடையே கூறினார்.