நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் வேட்டையன் ராஜா கேரக்டரின் தோற்றம் நாளை அறிமுகம் செய்யப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி 2 படத்தை தயாரித்து வருகிறது. இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இப்படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ராதிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பலரும்  'சந்திரமுகி 2' படத்தில் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் டப்பிங் பணிகளையும் முடித்து வருகின்றனர். இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் பணியை இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். 


மேலும் சந்திரமுகி 2 படத்தின்  இசை வெளியீட்டு விழா அடுத்தமாதம் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள வேட்டைய ராஜா கேரக்டரின் தோற்றம் நாளை அறிமுகம் செய்யப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 


இதுதொடர்பான அறிவிப்பில், "ராஜாதி ராஜா, ராஜ கம்பீர, ராஜா மார்த்தாண்ட, ராஜ குல திலக... வேட்டையன் ராஜா பராக் பராக் பராக்!" என கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கல் மகிழ்ச்சியடைந்தனர். 


சந்திரமுகி முதல் பாகம் 


 கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி படம் வெளியானது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா ஆகியோர் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 800 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். அது இப்போது சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.