சந்திரமுகி 2 இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் பவுன்சர்களால் தாக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பாக விளக்கமளித்து மன்னிப்பும் கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், நடிகர் வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் மற்றும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
மாணவரை தாக்கிய பவுன்சர்கள்
மேலும் நடிகர்களின் பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப் பட்டிந்தார்கள். அப்போது மாணவர் ஒருவர் சினிமா பிரபலங்கள் செல்லும் வழிப்பாதையை பயன்படுத்தியதால் அவரை தடுத்து நிறுத்திய பவுன்சர்கள் சுற்றி நின்று அந்த மாணவரை தாக்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சந்திரமுகி 2 படக்குழுவினர் சார்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தனது சார்பில் இருந்து மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் மன்னிப்பு
”அனைவருக்கும் வணக்கம், எங்களின் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவனுடன் கைகலப்பில் ஈடுபட்ட அசம்பாவித சம்பவத்தைப் பற்றி இப்போது தான் தெரிந்துகொண்டேன். முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. எங்கள் மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட நபராக இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு மற்றும் குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கக்கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன் நன்றி “ என்று அவர் தெரிவித்துள்ளார்.