மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், "வெடி விபத்து மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் எரிந்து தீக்கிரையாகின" என்றனர்.
சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து:
சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "துத்தாபுகூர் நீல்கஞ்ச் பகுதியில் இன்று காலை 10.40 மணியளவில் இரண்டு மாடி வீடு ஒன்றில் இந்த வெடிப்பு விபத்து சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக ஒரு வீட்டில் இருந்து தொழிற்சாலை இயங்கி வந்தது.
மேற்குவங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரத்தின் கோஷ், இதுகுறித்து பேசுகையில், "ஏழு அல்லது எட்டு பேர் இறந்திருக்கலாம். ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
ஏழு பேரை காவு வாங்கிய சம்பவம்:
நான் சம்பவ இடத்தை பார்வையிட உள்ளேன். வெடி விபத்து நடந்த கட்டிடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது பட்டாசுகள் தயாரிக்கப்படும் பகுதி அல்ல. இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள நில்கஞ்சின் நாராயண்பூர் பகுதி முக்கிய உற்பத்தி மையமாக இருந்தது. நாராயண்பூரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் போலீசார் மூடியுள்ளனர்" என்றார்.
சமீப காலமாக, மேற்வங்கத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்த மே மாதம், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.
மே மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் நோடகாலி பகுதியில் உள்ள மோகன்பூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
இம்மாதிரியான வெடி விபத்து சம்பவங்களை தடுக்கும் வகையில், தொழில் மையங்களில் மட்டுமே பட்டாசுகளை உருவாக்க வேண்டும் என புதிய கொள்கையை மேற்குவங்க அரசு வகுத்தது. அதன்படி, தொழில் மையங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, மேற்கு வங்க அரசு இதுபோன்ற சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கண்டறிய மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Moon Temperature: நிலவின் வெப்ப நிலை என்ன? விஞ்ஞான உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இஸ்ரோவின் புது அப்டேட்