'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா மணி, சரத்குமார், பிரேமி விஸ்வநாத் , பிரேம்ஜி அமரன், சம்பத் ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வெங்கட் பிரபு தெலுங்கிலும், நாக சைதன்யா தமிழிலும் அறிமுகமாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  




'கஸ்டடி' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருப்பதால் படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புரொமோஷனுக்காக நடிகர் நாக சைதன்யா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். பிரபல யூடியூபர் இர்ஃபான் தொகுத்து வழங்கிய இந்த நேர்காணலில் நாக சைதன்யாவிடம் காதல் முறிவு குறித்தும் அதற்கு பிறகு நட்பு குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, நாக சைதன்யா கொடுத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


எரிச்சல் தரும் வார்த்தை: 


உங்களுக்கு சமீபத்தில் உறவு முறிவு ஏற்பட்டது. காதல் ஒத்துவராது ஆனால் நல்ல நண்பர்களாக இருக்கலாம் என காதல் முறிவு செய்த போது உங்கள் முன்னாள் காதலி கூறியது பற்றி உங்களது கருத்து என்ன? என யூடியூபர் இர்ஃபான் கேட்டதும் அவரை குறுக்கிட்ட சைதன்யா "இனி நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்... இந்த நட்பு என்ற வார்த்தை தான் என்னை எரிச்சலடைய செய்கிறது. நான் நட்பை கேட்கவில்லை" என தெரிவித்தார். அவருடைய இந்த நேர்மையான பதில்தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.


 



எத்தனை முத்தம்: 


மேலும் இர்ஃபான், சைதன்யாவிடம் இதுவரையில் நீங்கள் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த சைதன்யா நான் அதை கணக்கு வைத்து கொள்ளவில்லை. திரைப்படங்களிலும் பலருக்கு முத்தம் கொடுத்துள்ளேன் ஆனால் அதை எண்ணியதில்லை என்றார். உங்கள் வாழ்க்கையில் "மிக பெரிய வருத்தமாக" கருதுவது எது என கேட்டதற்கு "என் வாழ்க்கையில் எந்த வருத்தமும் இல்லை. நான் அவற்றை ஒரு பாடமாகவே கருதுகிறேன்" என்றார். நாக சைதன்யா அளித்த இந்த பதில்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


டேட்டிங் செய்யும் சைதன்யா: 


நாக சைதன்யா - சமந்தா ரூத் பிரபு கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தனர். அதற்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இரு தரப்பில் இருந்தும் இது குறித்த அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் இந்த வதந்திகள் பரவி வருகின்றன.