வார் 2 படத்தில் கியாரா அத்வானியின் 9 விநாடி காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்துள்ளனர். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஜூனியர் என்டிஆர் மாறுபட்ட வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் ரிலீஸ் ஆகும் அதே நாளன்று வார் 2 படமும் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சன் போட்டியும் நடக்கிறது.
தமிழகத்தில் இதுவரை கூலி படம்தான் முன்னிலையில் இருக்கிறது. பான் இண்டியா அளவில் இப்படம் வெளியாக இருக்கிறது. சமீபகாலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஷாருக்கானுக்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பாரா என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில், வார் 2 படத்தில் இருந்து கியாரா அத்வானியின் 9 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியான நாள் முதலே கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படம் வெளிவர இன்னும் 3 நாட்களே இருக்கும் நேரத்தில் படத்திலிருந்து கியாரா அத்வானியின் 9 வினாடிகள் நீச்சல் உடை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதீத கவர்ச்சி இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இப்படத்திற்கு U/A சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.