மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 10) மாலை மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கண்ணகி மற்றும் கோவலனின் பெருமையைப் போற்றும் வகையில், பல்வேறு நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனது.
மகளிர் மாநாட்டில் கல்லூரி மாணவிகளை வற்புறுத்தி நடனமாட அழைப்பு
இந்த நிலையில் பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு ராமதாஸின் சரஸ்வதி கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகளை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி மாநாடு மேடையில் நடனமாட பயிற்சி அளிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூம்புகார் மாநாடு முடிந்து நள்ளிரவில் எப்படி திரும்புவது என்று தெரியாமலும் வீட்டில் அனுமதிக்காத நிலையிலும் அவர்களை வற்புறுத்தி நடனம் பயிற்சி மேற்கொள்ளவைத்து மாநாடிற்க்கு அழைத்து செல்வதாக வேதனை தெரிவித்து வரும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி தன் வாசம் இருப்பதனால் அதனை பயன்படுத்தி மாணவர்களை துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என சமூக வலைத்தளத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் கருத்து பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது பதிலளிக்காமல் மறுத்து இணைப்பை துண்டித்து விட்டார்.
மருத்துவர் ராமதாஸ் அழைப்பு :
பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ள, வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம்- குடும்பமாய், அணி, அணியாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன். பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், பெண்கள் இல்லாமல் குடும்பமோ- நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும் இந்த மகளிர் மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.
கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற மண்ணில் வன்னியர் சங்கம் சார்பில் என்னுடைய தலைமையில் நடைபெறுகிற இந்த பிரம்மாண்டத் திருவிழாவில் பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே, சகோதரிகளே உங்களை பாசத்தோடு எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து நான் அங்கே காத்துக் கொண்டிருப்பேன். உங்கள் வீரமும், எழுச்சியும் நிரம்பிய பாசத்திருமுகங்களை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் வருகையால் நான் மகிழவும், என்னைப் பார்த்து நீங்கள் மகிழவும் இந்தநாள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.
பெண்களுக்கு எல்லா நிலையிலும் பாதுகாப்பு, சம உரிமை, கல்வியிலும், வேலையிலும் முன்னுரிமை, குழந்தைகள் நலன், மது- போதைப் பொருள்கள் ஒழிப்பில் தீவிரம், முழுமையான சமூகநீதி போன்ற எண்ணற்ற நலன்களை போற்றும் பிரகடனங்களை மாநாட்டில் முன் மொழிவதோடு அவற்றை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்வது எப்படி என்கிற திட்ட வடிவத்தையும் மாநாட்டில் பேசுவோம், செயலாற்றுவோம்.
முக்கியமாய் பெண்கள் உணர வேண்டிய ஒன்றாக, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை முழுமையாய் வென்றெடுக்க, மகளிர் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. அது எப்படி என்பதையும் என் சகோதரிகளுக்கு மாநாட்டில் விளக்கப் போகிறேன். அதேபோல் அனைத்து சமூகத்தவருக்குமான உரிய இட ஒதுக்கீடு, சாதி வாரியான கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் பேசுவோம்.
கண்ணகி- கோவலன் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகம், அன்றைய நாளில் பூம்புகார் மண்ணில் நடக்கவுள்ளது என்பதையும்; மகளிர் பெருமளவு பங்கேற்கும் வீரதீர சாகச கலை நிகழ்ச்சிகளும் அன்றே நடைபெறவுள்ளது என்பதையும்; தெரிவித்துக் கொள்கிறேன்.பா.ம.க.வினரும், வன்னியர் சங்க நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும்; மாநாட்டு மேடையை நோக்கி வருவீர்கள் என்று உறுதிபட நம்புகிறேன்.
தமிழ்நாடே திரும்பிப் பார்த்திடவும், "ஆகா, இதுவன்றோ, மகளிர் மாநாடு" என்று வியந்து நிற்கவும்; இந்த மாநாட்டை ஒரு அடையாள மாநாடாகவே நடத்திக்காட்டப் போகிறோம். அதை செய்து முடிக்கப் போவது ராமதாசு ஆகிய நான் அல்ல; நீங்கள் தான்; மகளிர்தான்; மகளிரை முழுமையாக கொண்டாடி, மகளிரை போற்றி, மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்கும் ஒரே விழா; இந்த விழாதான். விரைந்தும், மகிழ்ச்சியுடனும், பூம்புகார் வருவீர்; அங்கே நாம் சந்திப்போம்; நம்முடைய வெற்றிகளுக்கான புதிய பாதை குறித்து கூடி சிந்திப்போம்; பேசி முடிவெடுப்போம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.