ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜஸ்தான் அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே மற்ற அணிகளில் இருந்து தேவையான வீரர்களை வாங்குவதற்கான டிரேட் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. எனவே சஞ்சு சாம்சனை வாங்க கொல்கத்தா அணியும், சிஎஸ்கே அணியும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் சஞ்சு சாம்சன் பங்கேற்றார். இந்த பேட்டியின் தொடக்கத்திலேயே அஸ்வின் சஞ்சுவிடம் உன்னை சுற்றி பல வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இதை பற்றி நீ என்ன நினைக்கிற என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன், எனக்கும் தெரியவில்லை. என்ன அமைய வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ அதன் வழியே நடக்கட்டும் என்று நினைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும், ராஜஸ்தான் அணி குறித்து பேசிய அவர், ராஜஸ்தான் அணியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். கேரளாவில் இருந்து ஒரு சிறிய பையன், தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தான். அப்போது ராகுல் டிராவிட் சாரும், மனோஜ் சாரும் எனக்குத் தேவையான வாய்ப்பை நம்பிக்கையுடன் அமைத்துக் கொடுத்தார்கள். இந்த உலகத்திற்குத் தெரியும் முன், எனது திறமையை அடையாளம் கண்டனர். அதன் பிறகு தான் சஞ்சு சாம்சன் உலகிற்கு தெரிய வந்தது. இந்த அணி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அண்ணா என்று தெரிவித்திருக்கிறார்.