விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ”நா ரெடி” பாடலில் திரைப்பட தணிக்கை குழு பல கட்களை போட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நா ரெடி பாடலுக்கு கட்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே யூடியூபில் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு மத்திய்இலும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது இப்படத்தில் உள்ள நா ரெடி பாடல். விஜயே இப்பாடலை பாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நா ரெடி பாடல் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதனை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் பாடலில் இருந்து பல்வேறு வரிகளை நீக்க உத்தரவிட்டுள்ளனர்.
நீக்கப்படும் வரிகள்:
தணிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலில் இருந்து “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்ட சீர்ஸ் அடிக்க”, “பத்தவச்சு பொகைய விட்டா பவரு கிக்கு, புகையல புகையல பவரு கிக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவாண்டா” போன்ற வரிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளையும் பாடலில் இருந்து நீக்க தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டே நடிக்கும் லியோ:
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஒரு பாடலும், 3 கேரக்டர்களின் அறிமுகமும் வெளியாகியுள்ளது. லோகேஷின் எல்சியு வரிசையில் லியோ படமும் இணையும் என கூறப்படுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இசை வெளியீட்டு விழா:
லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருப்பதால் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்பட், வரும் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மற்றொரு தகவலாக லியோ இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் பங்கேற்பார் என கூறப்படுகிறது.கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் லியோ விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.