Celebrity Cricket league 2025 : திரைநட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிர்ட்டி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடரானது இறுதிக்கட்டத்தை அடைந்ததுள்ளது. மொத்தம் 7 அணிகள் இந்த தொடரில் கலந்து கொண்டன, இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 நான்கு இடங்களை பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், பஞ்சாப் டி ஷேர் ஆகிய அணிகள் தகுதிப்பெற்றன. 

சென்னை ரைனோஸ் vs கர்நாடகா புல்டோசர்ஸ்:

டெஸ்ட் மற்றும் டி20 ஃபார்மெட்களை கலந்து புதுவிதமாக நடத்தப்படும் இந்த தொடரில் நேற்று மைசூரில் நடந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் பெங்கால் டைகர்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷேர்  இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி நடப்பு சாம்பியன் பெங்காலை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. 

இதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதின், இந்த போட்டியில் டாஸில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸ்சில் கர்நாடகா அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை குவித்தது, கர்நாடகா அணியில் ராஜீவ் அரைசதம் அடித்தார். சென்னை அணி தரப்பில் கலையரசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார், 

அடுத்தாக தங்களது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரமணா 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் கேப்டன் விக்ராந்த் பொறுப்பான அரைசதத்தால் சென்னை அணி முதல் இன்னிங்ஸ்சில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. கேப்டன் விக்ராந்த் 34 பந்தில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸ்சில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது. 

கடின இலக்கு:

இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய கர்நாடகா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது, சென்னை அணியும் ஃபீல்டிங்கில் சொதப்பி சுலபமான கேட்ச்களையும் விட்டது, கர்நாடகா அணி இரண்டாவது இன்னிங்ஸ்சில் 123 ரன்கள் குவித்தது, சென்னை அணி 130 என்கிற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை வெற்றி: ‘

130 ரன்கள் என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, இதனால் இந்த போட்டியில் கர்நாடகா அணி தான் வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் விக்ராந்த் மற்றும் அஜய் ஆகியோரின் அபார ஆட்டத்தால் சென்னை 130 ரன்கள் என்கிற இலக்கை 2 பந்துகள் மீதமிருக்க அடித்து வெற்றி பெற்றது. கேப்டன் விக்ராந்த் 22 பந்துகளில் 50 ரன்களும், அஜய் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினர். 

இந்த போட்டிக்கு முன்பு கர்நாடகா அணி சுலபமாக வெற்றிப்பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில் சென்னை ரைனோஸ் அணி அதை அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. 

இறுதிப்போட்டி: 

இன்று மாலை நடக்கும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் டி ஷேர் அணியுடன் சென்னை ரைனோஸ் அணி மோதவுள்ளது, மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி  ஜியோ ஸ்டார் மற்றும் சோனி டென் 3  ஆகியவற்றில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.