மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு வில்லன், குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. மழை, ஜெமினி, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான கலாபவன் மணி கடந்த 2019ம் ஆண்டு மார்ச்  மாதம் 3ம் தேதி திடீரென உயிரிழந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவரின் மரணம் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்று, தற்போது வெளியாகி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 



 


மரணத்தில் சந்தேகம் :


தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்ட கலாபவன் மணி இறந்த நாள் அன்று  தன்னுடைய பண்ணை வீட்டில்  நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டு இருக்கும் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 45 வயதிலேயே உயிரிழந்த கலாபவன் மணி உறவினர்கள் அவரின் மரணத்தில் ஏதோ சந்தேகம் இருப்பதாக கூறியதால் அவரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் காய்கறிப் பயிர்களுக்கு வழக்கமாக அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலவையான Chlorpyrifos  கலந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவரின் மரணம் ஒரு கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்ததால் சி.பி.ஐயிடம் வழக்கு  ஒப்படைக்கப்பட்டது. 


சி.பி.ஐ வெளியிட்ட அறிக்கை :


அந்த வகையில், கலாபவன் மணி மரணம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், சி.பி.ஐ குழு 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை குழுவை சேர்ந்த உன்னிராஜன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி திடுக்கிடும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். 


அதிர்ச்சி தகவல் : 


வெளியான தகவல்களின் படி கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பீர் பாட்டில் குடிக்கும் பழக்கம் இருந்ததே அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. கல்லீரல் செயலிழந்த நிலையிலும், ரத்த வாந்தி எடுத்தபோதும் அளவுக்கு அதிகமாக பீர் குடுக்கும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை.  மரணமடைந்த மார்ச் 6ம் தேதி 12 பீர் பாட்டில் குடித்துள்ளார் என்றும், அதில் மெத்தல் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் ஐ.பி.எஸ் அதிகாரி உன்னிராஜன். தன்னுடைய மரணத்தை தானே தேடிக்கொண்டார் என்றும் விசாரணையை நடத்திய அதிகாரி வேதனை தெரிவித்துள்ளார்.  


தீவிர விசாரணைக்கு பிறகே சிபிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. கலாபவன் மணி இறப்பதற்கு முதல் நாள் அவரின் வீட்டுக்கு வந்து சென்ற நண்பரகளான ஜாபர் இடுக்கி, தரிக்கிட சாபு உள்ளிட்டோரிடம் இது குறித்த விரிவான  வாக்குமூலம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.