இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை, அபிராமபுரம், ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சிகப்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி, இந்துக் கடவுள்களான ராமர், சீதா, அனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுதலை சிகப்பி மீது தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம்தான் புகார் அளித்ததாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், யோகேஸ்வரன் எனும் இயற்பெயர் கொண்டு விடுதலை சிகப்பி தன் சமூக வலைதளங்களிலும் இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்தி பதிவிட்டு வருவதாக சித்தர் நெறி மறுமலர்ச்சி பேரவை சார்பில் தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாராயணன் திருப்பதி மற்றும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆகியோரின் புகார்களின்பேரில் விடுதலை சிகப்பி மீது கலகத்தைத் தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிகப்பிக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவுக் குரல்கள் என மாறி மாறி ட்விட்டர் தளத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.