முன்னணி ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிவம் துபே, தீபக் சஹார் மற்றும் டெவொன் கான்வே ஆகியோரை கெளரவித்து இணைந்து 16 பிரிவுகளில் கிராண்ட் நேஷனல் ட்ரோன் 2023 விருதுகளை  வழங்கினர்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள க்ரோன் பிளாசா விடுதியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் கருடா ஏரோஸ்பேஸ் பாதுகாப்பு, விவசாயம், வரைபடம், சுரங்கம், திட்ட கண்காணிப்பு மற்றும் ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் 10 வகையான ட்ரோன்களை காட்சிப்படுத்தியதுடன்  ஹனுமான் எனும் புதிய ட்ரோனையும் வெளியிட்டது.


பின்னர் ட்ரோன் துறையில் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த  தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து 16 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.  இந்தியா முழுவதிலும் இருந்து ட்ரோன் தொழில் அமைப்புகள், பாரத் ட்ரோன் அசோசியேஷன் மற்றும் தேசிய ட்ரோன் பைலட் அசோசியேஷன் மற்றும்  500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.






சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிவம் துபே, தீபக் சாஹர் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்குபெற்ற இந்த விழாவில் மூவருக்கும் ட்ரோன் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் 16 பிரிவுகளில் ட்ரோன் துறையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள், நபர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 


தேசிய ட்ரோன் விருதுகள் 2023 ஐ  சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து நடத்தியதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ்,  இந்தியாவில் ட்ரோன் தொழில்துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அங்கீகரிப்பதற்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாகும் என்றார்.


தேசிய ட்ரோன் விருதுகள் 2023, தொழில்துறையின் சிறந்தவர்களைக் கௌரவிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் அறிவைப் பகிர்வதற்கும் உதவியுள்ளது.  ட்ரோன் தொழிற்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் சேர்ந்து, ட்ரோன் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகளைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, மகேந்திர சிங் தோனி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். கருடா ஏரோஸ்பேஸ் சமீபத்தில் $22 மில்லியன் திரட்டி வரலாற்றை உருவாக்கியது, இது ட்ரோன் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய  நிதியுதவியாகும். கருடா ஏரோஸ்பேஸ் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் ட்ரோன் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் ஆக இருக்கும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.