வீரமே வாகை சூடும் படத்தில் நடித்த நடிகை டிம்பிள் ஹயாதி உதவி காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கார் மீது மோதல்:


கடந்தாண்டு தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘வீரமே வாகை சூடும்’.  இந்த படத்தில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாதி நடித்திருந்தார். இப்படம் அவருக்கு தமிழில் முதல் படமாகும். அதேச்மாயம் தெலுங்கில் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த டிம்பிள் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் மீது தற்போது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்படுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


டிம்பிள் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜர்னலிஸ்ட் காலனியில் தனது வருங்கால கணவருடன் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் உதவி காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இதனிடையே நடிகை டிம்பிள்  தனது பிஎம்டபிள்யூ காரால் அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது மோதி சேதப்படுத்தியுள்ளார். 


எட்டி உதைத்த விஷால் பட ஹீரோயின்:


இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் ஹெக்டேவின் கார் டிரைவர் சேத்தன் குமார் டிம்பிள் மற்றும் அவரது வருங்கால கணவர் மற்றும் காரில் இருந்தவர்கள் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து டிம்பிள் ஹயாதி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தவுடன் சேத்தன் குமார் ஏன் இப்படி செய்தீர்கள்? என நடிகையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதனால் ஆவேசமடைந்த டிம்பிள் ஹயாதி, எனது பார்க்கிங்கில் எப்படி உங்கள் காரை நிறுத்தலாம் என சண்டை போட்டு ஐ.பி.எஸ். அதிகாரியின் காரை எட்டி உதைத்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது காவல்நிலையம் வரை சென்றுள்ளது. இதனையடுத்து டிம்பிள் ஹயாதி போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உதவி காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே, ”டிம்பிள் இதுபோன்று செய்வது முதல்முறை அல்ல என்றும், கடந்த காலங்களிலும் எனது காரை மறித்து பிரச்சனையை உருவாக்கினார்” என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம், டிம்பிள் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறுகளைத் தடுக்க முடியாது என்றும், அதிகாரத்தைப் பயன்படுத்துவது தவறுகளை மறைக்காது என்றும்” கடுமையாக விமர்சித்துள்ளார்.