தமிழுக்கும் அமுதென்று பேர்னு சொல்லுவாங்க.தமிழகத்துல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு வட்டார வழக்கம் இருக்கு. அந்தந்த பகுதியில பேசும் சில வழக்குகள் பிற மாவட்ட மக்களுக்கு சரியாக புலப்படுவது இல்லை ஆனாலும் அந்த வழக்குகள்ல ஏதோ ஒன்னு ரசிக்குற மாதிரி இருக்கும். நெல்லை, தூத்துக்குடி , கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்கள்ல மக்கள் பேசும் வழக்குகள் கேட்குறதுக்கே அவ்வளவு இனிமையா இருக்கும். இன்ஃபேக்ட் அவங்க திட்டுறது கூட நமக்கு கொஞ்சுற மாதிரிதான் இருக்கும்னு நண்பர்கள் வட்டாரம் பேச கேட்ருக்கேன் . அவங்க றகரம், ளகரம் , டகரத்துக்கெல்லாம் கொடுக்குற அழுத்தம்தான் ஹைலைட்.
அப்படி கன்னியாகுமரி , தூத்துக்குடி பகுதி மக்களோடா வட்டார வழக்குகள்ல இப்போ வைரல் ஆகிட்டிருக்க கார்டூன் வீடியோதான் , பலரின் "ஸ்ட்ரஸ் பஸ்டர் " , ஒரு குடும்பத்துல நடக்கற சின்ன சின்ன சம்பவங்கள், நண்பர்கள் வட்டாரத்துல நடக்குற சுவாரஸ்ய சம்பவங்கள், விடுதி வாழ்க்கையில நாம சந்திக்குற சம்பவங்களை எல்லாம் கதையா உருவாக்கி, அதுக்கென சில கதாப்பாத்திரங்களை உருவாக்கி, வட்டார வழக்குல குரல் கொடுத்து அசத்தியிருக்காங்க இந்த டீம்.
"என்ன டி” என்பதை "என்னட்டி", குழந்தைகளை, "மக்களே", அம்மாவை ,"அம்மை" போன்ற வட்டார வழக்குகளின் வித்தியாசங்கள் கேட்பவருக்கு "ஜாலி மூட்-ஐ" உருவாக்கிவிடுகின்றன.குறிப்பாக இந்த கார்டூன் கதாப்பாத்திரங்களில் ஒன்றான " பூமாரி"க்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஒரு வெகுளியான, படிப்பில் படு சுட்டியான குழந்தைதான் பூமாரி. எப்போதுமே சோடா புட்டி கண்ணாடியிலேயே வலம் வரும் பூமாரியை கிண்டல் செய்வதிலேயே பாதி எப்பிசோட் கதை நகரும், இருந்தாலும் அது பார்வர்களுக்கு சலிப்பினை உண்டாக்குவதில்லை. Tween craft என்ற செயலியை பயன்படுத்தி இதன் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு , குரல் கொடுக்கப்படுகிறது.
கன்னியாகுமரி கார்னர் , கன்னியாகுமரி காமெடி போன்ற பல யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டாலும் , சோனியாமஹி என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் கார்டூன் வீடியோக்களுக்குத்தான் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச போக்குவரத்து சேவை குறித்து வட்டார வழக்கில் வெளியிட்டிருந்த வீடியோ செம ஹிட். இது தவிர சில விழிப்புணர்வு வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு மக்களை மிகவும் எங்கேஜ்டாக வைத்திருக்கிறார்கள். கொரோனாவின் இரண்டாம் அலை குறித்த செய்திகள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும் சமயங்களில் இது போன்ற வீடியோக்கள் நிச்சயம் மன ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை