ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏதேனும் துன்பத்தில் சிக்கும் போது அவனைச் சுற்றியுள்ள சமூகத்திடமிருந்து வரும் வார்த்தைகள் தான் அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தை பிரதிபலிக்கும். நீ ஆடுன ஆட்டத்துக்கு உனக்குத் தேவைதான்? என்று வசைபாடவோ, அச்சச்சோ எப்படி இருந்த மனுசன் அவருக்கா இந்த நிலமை? என்ற இரு விமர்சனங்கள் போதும் அந்த மனிதன் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தான் என்பதைக் கூற.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்தவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் நல்ல பெயரைமட்டும் சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1979ல் அகல்விளக்கு திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் விஜயகாந்த்.


அதன்பிறகு சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் விஜயகாந்த். சினிமா என்னும் கலையை வசூலுக்காக மட்டும் என்றல்லாமல் எல்லா தரப்பு மக்களும் பயனடையவேண்டும் என்று நினைத்தவர் விஜயகாந்த் மட்டும் தான். சமூகக் கருத்துகள் மூலம், பாட்டளிகளின் உணர்வுகளை வாழ்க்கையை பிரதிபலித்ததன் மூலமாக கடைக்கோடி கிராமம் வரை சென்றடைந்தார் விஜயகாந்த். திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் யாருக்கும் தீங்கு நினைக்காதவர் விஜயகாந்த்.


தமிழ் திரைத்துறையின் வளர்ச்சியை மற்றும் அதன் பணியாளர்களின் நலனை உண்மையாக விரும்பியவர் விஜயகாந்த். தங்கள் சுயலாபங்களுக்காக அவரை வெறுத்தவர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் அனைவராலும் இப்போதும் விரும்பப்படுவராகவே இருக்கிறார் விஜயகாந்த். ரஜினி கமல், விஜய் அஜித் தனுஷ் சிம்பு என்று நடிகர்களுக்குள் போட்டி நிலவும் காலத்திற்கு முன்னதாக, தனக்குப் போட்டியாளர்கள் என்று கூறப்படவர்களையெல்லாம் அரவணைத்தேச் சென்றிருக்கிறார். அவருக்குப் போட்டியாகக் கருதப்பட்ட சரத்குமார், தனக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் தான் என்றும், விஜயகாந்துக்கு வரும் கதையில் நடிக்க சரியானவர் சரத்குமார் என்று நினைத்தால், அந்த இயக்குநரை தன்னிடம் அனுப்புவார் விஜயகாந்த் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சரத்குமார்.


இதுபோன்ற ஒரு தன்மையான ஒரு மனிதரை தற்போதைய நிலையில் ஒருவரைக் கூட சுட்டிக்காட்ட முடியாது என்ற அளவில் உயர்ந்துநிற்கிறார் விஜயகாந்த்.  சுயநலமில்லாத அவரது குணம் தான் அவரை எல்லா தரப்பு மக்களையும் விரும்ப வைத்திருக்கிறது. 


எம்ஜிஆரைப் போலவே கடைக்கோடி ரசிகனை நம்பி அரசியலுக்கு வந்தவர் தான் விஜயகாந்த். தனக்கு இருந்த பேர், புகழ் அனைத்தையும் சமூக நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தவர் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கினார். யாரை நம்பியும் அல்ல. தன் ரசிகர்களை நம்பி மட்டுமே கட்சி ஆரம்பித்தவர் எம்ஜிஆரைப் போல, என்டிஆரைப் போல. திமுக, அதிமுக என்று இரு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டை ஆட்சி செய்த நிலையில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக அரசியலுக்குள் வந்தார் விஜயகாந்த்.


ஜெயலலிதாவே கூட்டணி வைக்க விரும்பிய ஒரு ஆளாக இருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களைக் கைப்பற்றி, அண்ணா உருவாக்கிய கட்சியான திமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். கூட்டணித் தலைவர் என்பதற்காக சமரசம் செய்துகொள்ளாமல் சட்டமன்றத்திலேயே ஜெயலலிதாவை எதிர்த்து பேசியவர் விஜயகாந்த். தவறுகளுக்கு தலைவணங்காத அவரது அந்த போர்க்குணம் தான் அவரது அரசியல் அஸ்தமனத்திற்கும் வழிவகுத்தது.


சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட நிலைகுலைந்து போனார் விஜயகாந்த். அவரது உடல்நிலை மோசமடைய அவரது அனைத்துவிதமான நடவடிக்கைகளும் அடங்கிவிட்டது. ஆனால், மக்கள் மீதான அந்த அன்பு மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது. அதனால் தான் தன் மோசமான உடல்நிலைக்கு மத்தியிலும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியே வந்தார். தன் கட்சியினரை பொதுமக்களை சந்தித்தார். இப்போதும், அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த யாராவது விஜயகாந்தை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். யாராலும் வெறுக்க முடியாத வாழ்வை வாழ்வது எல்லோருக்கும் வாய்க்காது. அப்படி ஒரு வாழ்வு விஜயகாந்துக்கு வாய்த்தது. அதை அவரேதான் அமைத்துக்கொண்டார். 


விஜயகாந்த்தை கருப்பு எம்ஜிஆர் என்பார்கள். ஆனால், இன்னொரு விஜயகாந்த் என்று பெயரெடுக்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை என்பதே உண்மை.