உக்ரைனில் டினிப்பெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர தினத்தன்று கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் மேலும், பயணிகள் பயணித்த ரயிலுக்கு தீ வைத்ததாக கிய்வ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் வீடியோ உரையில், உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 3,500 பேர் வசிக்கும் நகரமான சாப்லைனில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்ததாக கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ மக்களை மீட்கும் பணியில் மீட்பு பணிக்குழு ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. எங்கள் நாட்டின் சுதந்திர தின நாளில் இது மிகப்பெரிய வலி. இந்த நேரத்தில் 22 பேர் இறந்துள்ளனர்.
செலன்ஸ்கி உதவியாளர் கைரிலோ திமோஷென்கோ வெளியிட்ட அறிக்கையில்,” ரஷ்யப் படைகள் சாப்லைன் மீது இரண்டு முறை ஷெல் தாக்குதல் நடத்தினர். ஏவுகணை மூலம் நடந்த தாக்கியதில் முதலில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். பின்னர் ரயில் நிலையத்தை ராக்கெட்டுகள் தாக்கியதில் 21 பேர் இறந்தனர். மேலும், ஐந்து ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர் என்று தெரிவித்தார்.
உக்ரைன் தனது சுதந்திரத்தின் 31 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் போது கொண்டாட்டங்களை சீர்குலைக்க ரஷ்யா "குறிப்பாக மோசமான ஒன்றைச் செய்ய முயற்சி செய்யலாம்" என்று செலன்ஸ்கி எச்சரித்ததை தொடர்ந்தும் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.