Captain Miller: கேப்டன் மில்லர் படத்தில் அதிக வன்முறைகள் இருப்பதால், 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 

அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷுடன் இணைந்து  பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். 

 

மூன்று பாகங்களாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ம் தேதி ரிலீசாக உள்ளது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருப்பதை ஏற்கெனவே படக்குழு உறுதி செய்திருந்தது. 1930 முதல் 40 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்றும், தனிமனிதனின் சுதந்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் மாதேஸ்வரன்  தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன்  எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று அவர் தெரிவித்தார்.
  

 

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் மொத்த ரன் டைம் 2 மணிநேரம் 37 நிமிடங்கள். ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் அதை நீக்க தணிக்கை குழு கூறியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகள் கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அவற்றை நீக்க தணிக்கை குழு கூறியிருந்தது. இதனால் லியோ படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டன.

 

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.  அதில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் ”தனுஷ் ராசாவே உன்னை காணாத நெஞ்சு” என்ற பாடலை பாடி விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.