புகழ்பெற்ற இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்”. நடிகர் மாதவன் இயக்கி இருக்கும் இந்தப்படம் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ராக்கெட்ரி படத்தை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 






இந்திய சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 75-வது ஆண்டு திருவிழா பாரம்பரியத்தின் துவக்கமாக கடந்த 17-ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், பா.ரஞ்சித், மாதவன், தீபிகா படுகோன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 


இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரில் படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நான் மாதவனின் “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்தேன். இந்தப்படம் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய குரலை கொண்டு வருகிறது” என்று பதிவிட்டுள்ளார். 






பாலிவுட் தயாரிப்பாளர் சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு பிரமாதமான படம். ராக்கெட்ரி விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் நேற்று இரவு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை அழகாக இயக்கியுள்ள மாதவன் நன்றாகவும் நடித்திருக்கிறார். பார்வையாளர்களோடு பார்வையாளராக விஞ்ஞானி நம்பி நாராயணன் இருந்தது நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது." என்று பதிவிட்டுள்ளார்.