விடாமுயற்சி


கிட்டதட்ட இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் , அர்ஜூன் , ரெஜினா ,ஆரவ் , த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் விடாமுயற்சி . லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வரும் பொங்கலுக்கு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.  இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தைப் போல் இருப்பதாக தெரிவித்தார்கள்.


பிரேக்டவுன்


ஒரு கணவன் மனைவி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்களின் கார் பிரேக் டவுன் ஆகிறது. மேலும் திடீரென்று மனைவி காணாமல் போகிறார். தொலைந்து போன தனது மனைவியை தேடி கணவன் செல்வதும் அதை தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளே இப்படத்தின் கதை. விடாமுயற்சி படத்தின் டீசரிலும் அஜித் த்ரிஷாவை தேடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ஒரேவேளை விடாமுயற்சி படத்தின் கதை பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிற பேச்சு இருந்து வருகிறது.


விடாமுயற்சி படக்குழுவிடம் நஷ்ட ஈடு கேட்ட ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம்


விடாமுயற்சி படம் ரிலீஸூக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்படத்திற்கு பெரிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதாவாது ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படக்குழுவிடம் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறாமல் அப்படத்தின் கதையை பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தங்களுக்கு 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமெளண்ட் பிக்ச்சர்ஸ் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிக்கலை படக்குழு எப்படி எதிகொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியே. மேலும் படத்தின் பட்ஜெட்டிற்கு நிகரான தொகையை நஷ்ட ஈடாக வழங்குவது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதும் இன்னொரு பிரச்சனை. 


லைகா தயாரிப்பு நிறுவனம் முன்னதாக வெளியிட்ட இந்தியன் 2 , வேட்டையன் ஆகிய படங்கள் வசூலில் பெரியளவில் லாபம் பெறாத நிலையில் அடுத்தபடியாக விடாமுயற்சி படத்திற்கு இப்படியான சிக்கல் எழுந்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது.