பா ரஞ்சித்:
'அட்டகத்தி' படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பா ரஞ்சித். அட்டகத்திக்கு பிறகு கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார். ஒரே ஒரு சுவற்றின் விளம்பரத்துக்காக இரு அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் அரசியல் போட்டியும், அதனால் ஏற்படும் கொலை சம்பவங்களும் தான் மெட்ராஸ் படத்தின் கதைக்களம். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே ரஜினியை வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்தார்.
ரஜினியை வைத்து 'கபாலி' படத்தை இயக்கிய பா ரஞ்சித் அதன் பிறகு காலா படத்தை இயக்கினார். மும்பையின் தாராவி பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றி அவர்களது நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் இரக்கமற்ற அமைச்சரிடமிருந்து தாராவி மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா என்பது தான் காலா கதை.
தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலமாக தலித் இன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பா ரஞ்சித், இதன் காரணமாக பல விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார். தற்போது தலித் இன மக்கள் மற்றும் அவர்களது நிறம் பற்றி கூறியுள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்..
தலித் என்பது கருப்பின் அடையாளமா?
என்னுடைய மெட்ராஸ் படத்தில் வெள்ளை நிற ஹீரோயினை ஏன் நடிக்க வைக்கிறீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டார்கள். தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பாக மட்டுமே இருப்பார்கள் என்கிற எண்ணம் தான் சிலர் உள்ளது. இதனால், எனக்கு கோபம் வந்தது. என்னுடைய பாட்டி கலராகத்தான் இருப்பாங்க. காலம் காலமாக தலித் இன மக்கள் கருப்பாக இருப்பார்கள் என்ற எண்ணத்தை நான் உடைக்க வேண்டும் என்று விரும்பினேன். மேலும், நான் எடுக்கும் படங்களில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுத்து அவர்களை உயர்த்தி பேசுவேன். தலித் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதை தான் உடைக்க வேண்டும் என்று நினைத்தே வெள்ளையாக ஒரு ஹீரோயினை நடிக்க வைத்தேன் என தெரிவித்துள்ளார்.