நாளை டார்லிங்ஸ் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ்-இல் வெளியாக உள்ள நிலையில், ஆலியா பட்டை புறக்கணிக்கும் விதமாக அவருக்கு எதிரான ஹாஷ்டாக் மூலம் ட்விட்டரில் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டார்லிங்ஸ்
ஆலியா பட் தனது அடுத்த திரைப்படமான டார்லிங்ஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். நேரடி ஓடிடி வெளியீடாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஷெபாலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோருடன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஆலியா பட் பத்ருனிசா ஷேக் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நாளை வெளியாகும் திரைப்படம்
நாளை இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டாக தொடங்கி உள்ளது. இப்போதெல்லாம், குறிப்பிட்ட விஷயங்களில் பிரபலங்களின் கருத்துக்களுடன் நெட்டிசன்கள் கருத்து வேறுபாடு கொள்வது வழக்கம். ஆயிரக்கணக்கான சமூக ஊடக பயனாளர்கள் எல்லா திரைப்படங்கள் குறித்தும் அதில் உள்ள 'சிக்கல்கள்' குறித்தும் ட்வீட் செய்கிறார்கள், விவாதம் செய்கிறார்கள்.
ஏன் இந்த ஹாஷ்டாக்?
ஆனால் ஆலியாவுக்கு எதிரான இந்த ஹாஷ்டாக் உருவான காரணம் கொஞ்சம் வித்தியாசமானது. அவர் நடிப்பில் வெளிவரவுள்ள டார்லிங்ஸ் திரைப்படம் வீட்டிற்குள் நடத்தப்படும் ஆண்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் சதி என்று பலர் கருதுகின்றனர். டார்லிங்ஸ் திரைப்படத்தில், ஆலியாவின் கணவராக ஹம்சா ஷேக் வேடத்தில் விஜய் ஆலியாவிடம் அடிவாங்கி நடித்திருக்கிறார்.
குடும்பத்தினரே நடத்தும் வன்முறை
தனது கணவரை ஆலியாவே கடத்தி வீட்டுக்குள் ஒளியவைத்து அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலியாவின் பாத்திரம் தன் கணவனை எண்ணெய் சட்டியால் அடிப்பது, முகத்தில் தண்ணீரை ஊற்றுவது, முகத்தை தண்ணீரில் மூழ்க வைப்பது என ட்ரெய்லர் முழுவதும் அவரை அடித்துக்கொண்டே இருக்கிறார். அவரைக் கொல்வதற்குப் பதிலாக, அவர் ஆலியாவை நடத்தியது போலவே அவரையும் நடத்தத் திட்டமிடுவதையும் சித்தரிக்கிறது. அவரை எப்போதும் நாற்காலியில் கட்டி வைத்து அடிக்கும்படியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Boycott ஆலியா பட்
இதுபோன்ற காட்சிகள் ஆண்களுக்கு எதிராக வீட்டிற்குள் நடத்தப்படும் வன்முறையை ஆதரிக்கும் விதமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலர் ஆலியா பட்டிற்கு எதிராகவும், இந்த படத்தை புறக்கணிக்கவும் கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்