நவம்பர் 1ஆம் தேதி நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம், 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.


பள்ளிகள் தொடங்கியபோது அங்கும் இங்கும் சில பள்ளிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட பள்ளிகள் மூடப்படவில்லை. குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் ஓரிண்டு நாட்கள் லீவு விட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் மாணவர்களுக்கு வருகைப் பதிவை கட்டாயம் ஆக்கக் கூடாது என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், வரும் 1 ஆம் தேதி முதல் முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் நர்சரிப் பள்ளிகளை திறப்பது குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. அண்மையில், வெளியான ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையில், நர்சரி பள்ளிகளும் திறக்கப்படுவது போல சேர்த்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும், இது தொடர்பான, தெளிவான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து குழப்பத்திற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் முதல்வருடன் ஆலோசித்தோம் என்றும் தெரிவித்தார்.


இந்நிலையில், வரும் நவம்பர் ஒன்றாம் தேதி நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 




இல்லம் தேடி கல்வித் திட்டம்:


கரோனா தொற்று காலத்தில் 1 ஆம் முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


தினமும் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


அதேபோல் மாணவர்களின் நலனைக் கருதி அரையாண்டுத் தேர்வு நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பில்லை. நேரடியாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். அதற்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.