2022ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரீகர்களுக்கான தேர்வு இந்தியா மற்றும் சவுதி அரேபிய அரசு ஆகியவை வகுக்கும் விதிமுறைகளின்படி இருக்கும் என மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 


கடந்தாண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்ததால் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அப்போதும் அதில் பங்கேற்க சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்போருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள சூழலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஹஜ் பயணத்திற்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. 




இதையடுத்து 2022ஆம் ஆண்டுக்கான  ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள், சவுதி அரேபிய அரசின் கோவிட் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி  தெரிவித்துள்ளார். ஹஜ் யாத்திரை ஆய்வுக் கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதற்கு மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையின விவகார அமைச்சக செயலாளர் ரேணுகா குமார் , சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதர் டாக்டர் ஹாசுப் சையீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் நடைபெறும் என தெரிவித்தார். இந்தோனேசியாவிற்கு பிறகு உலக அளவில் அதிகளவு ஹஜ் யாத்ரீகர்களை அனுப்பும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது 2022-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன இந்நிலையில் வயது வரம்பு, தகுதி, உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்  இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
தொற்றுநோய் நிலை காரணமாக தேசிய மற்றும் சர்வதேச நெறிமுறை வழிகாட்டுதல்கள் 2022 ஹஜ் யாத்திரையின்போது கண்டிப்பாக பின்பற்றப்படும், இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் இரு நாட்டு அரசுகளும் வழங்கும் வழிகாட்டுதல்களின்படி முழு ஹஜ் 2022 செயல்முறையும் நடைபெறும் என தெரிவித்தார். 




மேலும், கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஹஜ் யாத்திரைக்கு  ஆண்கள் துணையின்றி செல்ல "மெஹ்ரம்"  திட்டத்தின் கீழ் 3000 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.  இந்த விண்ணப்பங்களும் 2022ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு தகுதியானவை. அவர்கள் அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்பினால் அவையும் தகுதியுள்ள விண்ணப்பங்களாக ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்தார். மற்ற பெண்களும் "மெஹ்ரம்" பிரிவின் கீழ் ஹஜ் 2022 க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மெஹ்ரம் பிரிவின் கீழ் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் குலுக்கல் முறையிலான தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.