நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாரதிராஜாவையே சேரும். இவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரமான மயில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதனை தொடந்து பாலிவுட்டிலும் சோல்வா சாவான் என்ற பெயரில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் ஸ்ரீதேவி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, பாலிவுட்டின் கனவுக்கன்னியாக மாறினார். ஏறத்தாழ பாலிவுட்டிலும் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் துபாயில் குளியல் அறைக்குச் சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். 


Khushi Kapoor | நடிகை ஸ்ரீதேவி வீட்டில் இருந்து அடுத்த சினிமா வாரிசு!! ஏப்ரலில் ஷூட்டிங்..!


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக போனி கபூர் இருப்பதால் எப்போதுமே டாக் ஆப் த டவுனாக இருக்கிறார் ஜான்வி.


அதே போல தனது இரண்டாவது மகளான குஷி கபூரும் நடிக்க வருவார் என்று எல்லோரும் பல வருடங்களாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சினிமாவில் களம் இறக்க முடிவு செய்துவிட்டார் போனி கபூர். இதற்கான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை என்றாலும் போனி கபூர் ஒரு நேர்காணலில், இரண்டாவது மகள் குஷி கபூர் நடிப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார் என்று கூறிய அவர் அது குறித்த தெளிவான விஷயங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் வரும் ஏப்ரலில் இருந்து அவர் அறிமுகப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது, அதில் குஷி கபூர் நடிக்க தயாராகி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.



அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், பல நாட்களாகவே கிசுகிசுக்கப்படும் ஜோயா அக்தர் இயக்கும் திரைப்படத்தில் தான் அவர் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தில், இவர் மட்டுமின்றி ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா இணைந்து நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியீட்டிற்காக எடுக்கப்படுகிறது என்று ஜோயா அக்தர் தெரிவித்துள்ளார்.


பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.நடிகை ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி, குஞ்சன் சக்சேனா, தி கார்கில் கேர்ள், தடக், ரூஹி போன்ற திரைப்படங்கள் மூலம் தடம் பதித்து விட்டார். அதே போல தங்கையும் நடிப்பில் தன் திறமையை வளர்த்துக்கொண்டு நடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.