கிட்னி செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் முன்னணி நடிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 






இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், வேலாயுதம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.






இவர் கடந்த இரு வாரத்திற்கு முன் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக நடிகர் பெஞ்சமின் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போண்டா மணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின்  மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். 


நடிகர் வடிவேலுவும் தன்னால் இயன்ற உதவியை செய்யவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து போண்டா மணி வீடு திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரிலும், முதலமைச்சரின் உதவியாளர் போனிலும் நலம் விசாரிப்பதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனைக்கு நான் இருக்கும் அதிமுக கட்சியினர் வராதது வருத்தமளித்த நிலையில் வீட்டிற்கு வந்து அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின் நலம் விசாரித்து நிதியுதவி வழங்கியது மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார். 


அதேசமயம் நான் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில் எனக்கு விரைவில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் சினிமாதுறை சார்ந்தவர்கள் உதவி செய்வர்கள் என நம்புகிறேன் என போண்டாமணி தெரிவித்துள்ளார்.