தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை, ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கலந்து கொண்டு ரூ.91 கோடியே 23 லட்சம் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டம், துறைமுக நுழைவு வாயில் அகலப்படுத்துதல், காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டம் உள்ளிடட ரூ.186 கோடியே 75 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் பேசிய அவர், இந்தியா சக்திவாய்ந்த நாடாகவும், சுயசார்பு நாடாகவும் வளர்ந்து வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தொடங்கப்பட்டு உள்ள திட்டங்கள், இந்த துறைமுகத்தை உலகில் முக்கியமான துறைமுகமாக மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த துறைமுகம் கடந்த நிதியாண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது. இது துறைமுகத்தின் திறமையை வெளிக் கொண்டு வந்து உள்ளது. மேக்இன் இந்தியா, ஆத்மநிர்பர் போன்ற வளர்ச்சி திட்டங்கள் மூலம் தான் மக்கள் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளிவர முடியும். மோடியின் நடவடிக்கைகளால் இந்தியா சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு உள்ள நாடாக மாறி உள்ளது. நான் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும் போதும் மிகவும் ஆச்சரியப்பட்டு உள்ளேன். இங்கு உள்ள செழுமையான பண்பாடு, கலாசாரம், ராமானுஜர், திருவள்ளுவர் போன்ற சிறந்த மனிதர்களை கண்டு ஆச்சரியப்பட்டு உள்ளேன்.
தமிழகம், இந்திய பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம் போன்றவற்றிலும் தமிழகம் முக்கிய இடம் பெற்று உள்ளது. இந்தியா 2047-ல் சுயசார்பு நாடாக மாற மக்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள திட்டங்கள் பிரதம மந்திரியின் கனவுகளை நினைவாக்கும் திட்டங்கள் ஆகும். நாட்டின் வளர்ச்சியோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். பிரதமர் மாசு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். இதற்காக இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் நடந்து வருகின்றன. 2070-ல் இந்தியாவில் கார்பன் வெளியீடு பூஜ்ஜியம் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கப்பல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாகர்மாலா திட்டம், கடற்சார் மேம்பாட்டு திட்டம் மூலம் 2030-ல் துறைமுகங்களுக்கு சிறப்பான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
இந்தியாவில் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் கொள்ளளவில் 96 சதவீதமும், மதிப்பில் 76 சதவீதமும் வர்த்தகம் செய்து உள்ளோம். துறைமுகம் சார்ந்த தொழில்கள், நவீன மயம், துறைமுக இணைப்பு வசதிகள், கடலோர சமுதாய மேம்பாடு, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆகிய 5-ம் முக்கியமானவை ஆகும். இதில் 2021-22 -ம் ஆண்டு 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய பிரதமர் இலக்கு நிர்ணயித்து இருந்தார். ஆனால் அந்த ஆண்டு முடிவதற்கு 2 மாதம் முன்பே 430 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்து சாதனை படைத்து உள்ளோம். வ.உ.சி. துறைமுகத்தில் தற்போது தொடங்கப்பட்டு உள்ள பணிகள் முடிவடையும் போது, நாட்டில் சிறந்த பசுமை துறைமுகமாகவும், சரக்கு கையாளும் துறைமுகமாகவும் மாறும் என்றார்.
தொடர்ந்து வ.உ.சி. துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்று முனையமாக மாற்றுவது தொடர்பாக தனியார் நிறுவனங்களிடம் விருப்பம் கேட்டு உள்ளோம். இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் .இதனை செயல்படுத்த முன்வரும் பட்சத்தில் திட்டம் நிறைவேற்றப்படும். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் பெரிய துறைமுகமாக மாறும். மத்திய அரசின் துறைமுக மசோதா, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களை பாதிக்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் 10 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த மசோதாவால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. தமிழக அரசிடம் இருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாக கூறிய அவர், வ.உசி. துறைமுகத்தில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டென்மார்க், நார்வே நாடுகளை சேர்ந்த எனர்ஜி ஏஜென்சிகளுடன் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாகர் மாலா திட்டத்தில் தமிழகத்தில் ரூ.1.46 லட்சம் கோடி மதிப்பில் 109 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் ரூ.33 ஆயிரத்து 730 கோடி மதிப்பிலான 43 திட்டங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 திட்டங்கள் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மீதம் உள்ள 38 பணிகளும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மேலும் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கடல் விமானம் இயக்குவதற்காக, விமானம் நிறுவனத்தினரிடம் விருப்பம் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றார்.